Tuesday, 1 March 2011

உலகின் மிகப் பெரிய "குடும்பஸ்தன்' ஜியோனா சானா: 39 மனைவிகள்; 94 குழந்தைகள்

பலதார மணம் தடை செய்யப்பட்டுள்ளது என்றாலும், உலகிலேயே அதிகமான மனைவிகளை கொண்டு, பெரிய குடும்பமாக வாழ்பவர் என்ற பெருமையை, ஒரு இந்தியரே பெற்றுள்ளார். வடகிழக்கு மாநிலமான மிசோரமைச் சேர்ந்த ஜியோனா சானா என்ற, "இளைஞர்' தான், 39 மனைவிகளுடன், பெரிய குடும்பமாக வாழ்ந்து வருகிறார்.

விலைவாசி விண்ணை முட்டும் இந்த காலகட்டத்தில், ஒரு மனைவி, இரண்டு குழந்தைகளை வைத்து குடும்பம் நடத்துவது என்பதே, இமாலய சாதனை. ஆனால், அந்த காலத்தில் மன்னர்களும், பிரபுக்களும் ஏராளமான மனைவிகளை கொண்டிருந்தனர். ராமாயணத்தில், தசரத சக்ரவர்த்தி, 60 ஆயிரம் மனைவியருடன் வாழ்ந்தார் என்று கூறப்பட்டுள்ளது. நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து, ஒருவனுக்கு ஒருத்தி என்பது சட்டமாக்கப்பட்டது. குறிப்பிட்ட சில சமூகங்களை தவிர்த்து, இச்சட்டம் கடுமையாக பின்பற்றப்படுகிறது. வடகிழக்கு மாநிலமான மிசோரமைச் சேர்ந்த ஜியோனா சானா என்பவர், 39 மனைவிகளுடன் வாழ்ந்து, உலகின் மிகப் பெரிய குடும்பத்தை கொண்டவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 39 மனைவிகள் மூலம் 94 குழந்தைகளை பெற்றுள்ளார். தற்போது இவர் வீட்டில், 14 மருமகள்களும், 33 பேரக் குழந்தைகளும் உள்ளனர். தனது பெரிய குடும்பத்தை பராமரிப்பதற்காக, தனது சொந்த கிராமத்தில், 100 அறைகள் கொண்ட ஒரு மாளிகையை அவர் கட்டினார்.
இந்நிலையில், தனது குடும்பத்தினரின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க வேண்டும் என்று விரும்பிய ஜியோனா சானா, தனது அடுத்த திருமணத்திற்காக பெண் பார்க்கும் படலத்தை துவக்கியுள்ளார். தன்னைச் சுற்றி வரும் பல பெண்களில் இருந்து ஒருவரை அவர் தேர்ந்தெடுக்க உள்ளதாக குடும்பத்தினர் கூறுகின்றனர். தற்போது 67 வயதான ஜியோனா சானா, உள்ளூர் பெண்களை தவிர்த்து, அமெரிக்கா சென்று, அங்கு ஒரு பெண்ணை பார்த்து மணம் செய்து கொள்ளலாம் என்று திட்டமிட்டுள்ளார். திருமணத்தில் அதிக நாட்டம் கொண்ட ஜியோனா சானா, தனது மனைவிகளுக்கு அறைகளை ஒதுக்குவதில் கவனமாக இருக்கிறார். இளம் மனைவிகளை, தனது பிரத்யேக படுக்கை அறைக்கு பக்கத்தில் உள்ள அறைகளிலும், வயதான மனைவிகளை, தனது மாளிகையின் ஒதுக்குப் புறங்களில் அமைக்கப்பட்டுள்ள மற்ற அறைகளிலும் தங்க வைத்துள்ளார். "நான் கடவுளின் சிறப்புக் குழந்தை. அதனால் தான், என்னை கவனித்துக் கொள்வதற்காக ஏராளமான சொந்தங்களை எனக்கு கொடுத்துள்ளார். நான், 39 மனைவிகளின் கணவன் என்பதை நினைத்து பெருமைப்படுகிறேன். இந்த வகையில் நான் அதிர்ஷ்டக்காரன்' என்று கூறியுள்ளார், "காதல் மன்னன்' ஜியோனா சானா.