Thursday, 9 September 2010

தடுப்பு முகாம்கள்: ஆங்கிலேயரின் மாபெரும் கண்டுபிடிப்பு

Concentration Camps" என அழைக்கப்படும் "தடுப்பு முகாம்கள்", முதன்முதலாக உலக வரலாற்றில் ஜெர்மனியில் நாசிகளால் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டதாக இப்போதும் பலர் கருதுகின்றனர். ஆனால் அதற்கு பல வருடங்களுக்கு முன்னரே, 1901 ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் ஆங்கிலேயர்கள் தடுப்பு முகாம்களை அமைத்து மக்களை வதைத்த சரித்திரம் இன்று மறக்கப்பட்டு விட்டது. அதே காலகட்டத்தில் பிலிப்பைன்ஸ் தீவுகளில் அமெரிக்கர்களால் தடுப்பு முகாம்கள் நிறுவப்பட்டிருந்தன.

தென் ஆப்பிரிக்காவில் டச்சு மொழி பேசும் மக்கள் 17 ம் நூற்றாண்டிலேயே சென்று குடியேறி, காலனிகளை அமைத்திருந்தனர். இன்றைய நெதர்லாந்து, பெல்ஜியம், ஜெர்மனி போன்ற நாடுகளில் இருந்து சென்றவர்கள் தம்மை "ஆப்பிரிக்கானர்கள்" என அழைத்துக் கொண்டனர். இவர்கள் பேசிய மொழி பெருமளவு டச்சு மொழியை ஒத்திருந்தாலும், அதனை "ஆப்பிரிகானர் மொழி" என அழைத்தனர். 19 ம் நூற்றாண்டில் தென் ஆப்பிரிக்காவை கைப்பற்றி காலனிப்படுத்த வந்திறங்கிய ஆங்கிலேயருக்கும் இவர்களுக்கும் இடையில் உருவான முரண்பாடுகளால், வடக்கு நோக்கி நகர்ந்த ஆப்பிரிக்கானர்கள், அங்கே "Transval", "Orange Free State" ஆகிய குடியரசுகளை ஸ்தாபித்தனர். ஆங்கிலேயர்கள் அந்த குடியரசுகளையும் ஆக்கிரமிக்கும் நோக்கில் படையெடுத்தனர். பல ஆண்டுகளாக நடந்த இந்த போர், வரலாற்றில் "பூர் யுத்தங்கள்" என அழைக்கப்படுகின்றன. Boer(உச்சரிப்பு: பூர்) என்றால் விவசாயி என்று அர்த்தம்.

19 ம் நூற்றாண்டின் இறுதியில் இந்த யுத்தம் முடிவுக்கு வந்து, ஆப்பிரிகானர் பிரதேசங்கள் யாவும் ஆங்கிலேயர் வசம் வந்து விட்டன. ஆனால் பூர்களின் கெரில்லா யுத்தம் தொடர்ந்தது. "மக்கள் என்னும் நீருக்குள் நீந்தும் மீன்களே கெரில்லாக்கள்" என்பது போர் நியதி. அதனால் நீரை வெளியேற்றி விட்டால் மீன்கள் இறந்து விடும் என்று கணக்குப் போட்டது ஆங்கிலேய அரசு. அந்த சிந்தனையில் உதித்த திட்டம் தான் "தடுப்பு முகாம்கள்." ஆப்பிரிகானர் குடியிருப்புகளில் இருந்த பெண்கள், குழைந்தைகள் எல்லோரும் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு, தடுப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். சுற்றிவர முட்கம்பி வேலி இடப்பட்டு, ஆங்கிலேய இராணுவத்தால் பாதுகாக்கப்பட்ட இந்த முகாம்களில் அடைக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கூட செய்து கொடுக்கப்படவில்லை. குடிநீரின்றி, சுகாதார வசதிகள் இன்றி பலர் நோய் வாய்ப்பட்டு இறந்தனர். 26730 ஆப்பிரிகானர்கள் இந்த தடுப்பு முகாம்களில் மரணமுற்றனர். இதில் பெரும்பான்மையான சாவுகள் வசதிக் குறைபாடுகளால் நேர்ந்தவை.

காடுகளுக்குள் மறைந்திருந்து கெரில்லாத் தாக்குதல்களை தொடர்ந்த பூர் படையினர், இறுதியில் பட்டினி கிடக்கும் நிலைக்கு தள்ளப்பட்டதால், ஆங்கிலேயரிடம் சரணடைந்தனர். சமாதான ஒப்பந்தம் ஒன்றின் பின்னர் போராட்டத்தை கைவிட்டனர். புதிய தென் ஆப்பிரிக்கக் குடியரசில் ஆப்பிரிகானர்கள் "தேசியக் கட்சி" என்ற பெயரில் பாராளுமன்ற ஜனநாயகத்தில் இணைந்து கொண்டனர். ஆங்கிலேயர்கள் போரில் வெற்றியடைந்ததாலும், அவர்களின் ஆதிக்கம் அடுத்து வரும் நூறாண்டுகளுக்கும் நிலைத்து நின்றதால், இத்தகைய வரலாற்றின் கறுப்புப் பக்கங்களை இலகுவாக மறைக்க முடிந்தது. ஆங்கிலேயர்கள் தமது தடுப்பு முகாம் பரிசோதனையை, தமது நட்பு நாடுகளிலும் அறிமுகப்படுத்தினர். அதற்கு மிகச் சிறந்த உதாரணம்: மலேசியா.

பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த மலேசியாவை இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் ஆக்கிரமித்தது. ஜப்பானிய ஆக்கிரமிப்பை எதிர்த்து மலேசிய கம்யூனிஸ்ட் கட்சி ஆயுதப்போராட்டம் நடத்தியது. தனது காலனியை இழந்த பிரிட்டன், கம்யூனிஸ்ட்களின் போராட்டத்திற்கு நிதி மற்றும் ஆயுத உதவி வழங்கி வந்தது. இரண்டாம் உலகப்போரின் முடிவு நேச நாடுகளுக்கு சாதகமாக அமைந்ததால், ஜப்பானியப் படைகள் பின்வாங்கி ஓடவும், பிரிட்டிஷ் படைகள் மலேசியாவை மீளக் கைப்பற்றின. போருக்குப் பின்னர் மலேசியாவிற்கு சுதந்திரம் கொடுக்க முன்வந்த ஆங்கிலேயர்கள், ஆக்கிரமிப்புக் காலத்தில் ஜப்பானியருடன் சேர்ந்து வேலை செய்த மலேய மேட்டுக்குடியினரின் கையில் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்ததனர். ஜப்பானியர்களை எதிர்த்துப் போராடிய கம்யூனிஸ்ட்கள் ஓரங்கட்டப்பட்டனர். இந்த அட்டூழியத்திற்கு எதிராக கிளர்ந்தெழுந்த கம்யூனிஸ்ட்கள் மீண்டும் ஆயுதங்களை கையிலெடுத்தனர்.

தற்போது ஆட்சிப்பொறுப்பை ஏற்ற புதிய மலேய இராணுவத்தால் கம்யூனிஸ்ட் கெரில்லாக்களை எதிர்த்துப் போரிட இயலவில்லை. ஒரு சில வருடங்கள் போர் நீடித்தால் மலேசியா கம்யூனிச நாடாகி விடும் என்று அஞ்சிய பிரிட்டன், மலேசிய அரசிற்கு உதவி வழங்க முன்வந்தது. வெறுமனே இராணுவ ஆலோசனையுடன் நின்று விடாது, பிரிட்டிஷ் வீரர்களும் களத்தில் இறங்கினர். அப்போதும் கம்யூனிச கெரில்லாகளை அடக்க முடியவில்லை. அப்போது தான் பிரிட்டன் தனது "தென் ஆப்பிரிக்க தடுப்பு முகாம் பரிசோதனையை" மலேசியாவிற்கும் சொல்லிக் கொடுத்தது.

மலேசியக் கம்யூனிஸ்ட் கட்சியானது, அப்போது சீனாவில் வெற்றிவாகை சூடிய மாவோவின் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியை முன்னுதாரணமாகக் கொண்டு அமைக்கப்பட்டது. அதற்கு அந்தக் கட்சி மலேசிய சிறுபான்மை இனமான சீனர்களில் இருந்து உருவானதும் ஒரு காரணமாக இருக்கலாம். மலேசிய கம்யூனிஸ்ட் கட்சி தலைமையும், பெரும்பாலான உறுப்பினர்களும் சீனர்களாக இருந்தனர். மலேய, இந்திய உறுப்பினர்களும் இருந்த போதும் மொத்த சனத்தொகையுடன் ஒப்பிடும் போது அவர்களது பங்களிப்பு மிக மிகக் குறைவாக இருந்தது. கட்சியின் ஆதரவுத்தளமும் சீன சிறுபான்மைச் சமூகமாகவே இருந்தது. இந்த இனரீதியான வேறுபாட்டை, மலேசிய அரசும், பிரிட்டனும் தமக்குச் சார்பாக பயன்படுத்தினர்.

மலேசியாவில் இருந்த சீனர்களின் நகரக் குடியிருப்புகள், கிராமங்கள் யாவும் சுற்றி வளைக்கப்பட்டு மக்கள் வெளியேற்றப்பட்டனர். தொலைதூரங்களில் அமைக்கப்பட்ட, இராணுவத்தால் பாதுகாக்கப்பட்ட தடுப்பு முகாம்களுக்குள் அடைக்கப்பட்டனர். மக்களின் சுதந்திர நடமாட்டம் முகாம்களுக்குள் முடக்கப்பட்டது. திறந்தவெளி சிறைச்சாலைகளான முகாம்களை விட்டு யாரும் வெளியேற விடாமலும், வெளியில் இருந்து யாரும் உட்புக முடியாமலும் இராணுவத்தால் கண்காணிக்கப்பட்டன. காடுகளுக்குள் மறைந்திருந்த கெரிலாக்கள் அழிக்கப்படும் வரை, மக்கள் தடுப்பு முகாம்களுக்குள் வருடக்கணக்காக வைத்திருக்கப்பட்டனர். என்பதுகளின் இறுதியில் போராட்டத்தை தொடர முடியாத கம்யூனிஸ்ட் கட்சி அரசுடன் சமாதான ஒப்பந்தம் போட்டு சரணடைந்தது. முக்கிய தலைவர்களும், சில உறுப்பினர்களும் தமது குடும்பத்துடன் தாய்லாந்தில் புகலிடம் கேட்டு அங்கேயே தங்கி விட்டனர்.

தடுப்பு முகாம்கள் அமைப்பதில் ஆங்கிலேயரின் பேரப்பிள்ளைகளான அமெரிக்கர்களும் சளைத்தவர்கள் அல்ல. அமெரிக்க நாட்டின் பூர்வ குடிகளான செவ்விந்தியர்களின் வாழ்விடங்கள் பறிக்கப்பட்டு, அம் மக்கள் Reservation என அழைக்கப்படும் குறுகிய பிரதேசத்திற்குள் வாழும்படி நிர்ப்பந்திக்கப்பட்டனர். இன்றைக்கும் அமெரிக்காவிலும், கனடாவிலும் காணப்படும் இந்த Reservation கிராமங்கள், முட்கம்பி வேலி இடப்படாத, இராணுவ காவல் இல்லாத தடுப்பு முகாம்கள் என்பதில் ஐயமில்லை. நமக்கெல்லாம் தெரிந்த தடுப்பு முகாம்கள் இரண்டாம் உலகப்போர் காலத்தில் தோன்றி இருந்தன. அப்போது அமெரிக்க ஜப்பானுடன் போரில் ஈடுபட்ட காலமது. அமெரிக்காவில் இருந்த ஜப்பானிய சிறுபான்மைச் சமூகத்தினர் அனைவரும் எதிரிகளாக சந்தேகிக்கப்பட்டனர். அதனால் பெண்கள், குழந்தைகள் உட்பட முழு ஜப்பானிய மக்களும், அமெரிக்கா எங்கும் நிறுவப்பட்ட தடுப்பு முகாம்களுக்குள் அடைத்து வைக்கப்பட்டனர். போரில் ஜப்பான் தோற்ற பின்னர் தான் அந்த முகாம்கள் திறந்து விடப்பட்டன.