அவுஷ்விட்ஸ்-பிர்க்கெனாவு (Auschwitz-Birkenau; Konzentrationslager Auschwitz) என்பது 1940-1945 காலப்பகுதியில் இருந்த நாசி ஜேர்மனியின் ஒரு மிகப்பெரிய வதை முகாம் ஆகும். இது ஜேர்மனி வசம் இருந்த தெற்கு போலந்தில் கிராக்கோவ் நகரிலிருந்து மேற்கே 50 கிலோமீட்டர் தூரத்தில், வார்சாவிலிருந்து 286 கிமீ தூரத்தில் அவுஸ்விட்ச் (ஒஸ்வியேச்சிம்) என்ற நகரருகில் அமைந்திருந்தது.
இம்முகாம் மூன்று முக்கிய பிரிவுகளைக் கொண்டிருந்தது. முதலாவது, அவுஷ்விட்ஸ் I, இது நிர்வாக மையம்; இரண்டாவது, அவுஷ்விட்ஸ் II (பிர்க்கெனாவு), கொலை முகாம்; மூன்றாவதாக, அவுஷ்விட்ஸ் III (மொனோவிட்ஸ்), தொழில் முகாம். முதல் இரண்டும் 1979 இலிருந்து உலக பாரம்பரியக் களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றை விட கிட்டத்தட்ட 40 சிறு முகாம்கள் இம்முகாமைச் சுற்றி 10 கிமீ வட்டாரத்தில் இருந்தன[1].
அவுஷ்விட்ஸ் முகாம்களை நேரடியாக மேற்பார்வை செய்தவர், ஹிட்லரின் விசுவாசியான ருடொல்ஃப் ஹஸ் (Rudolf Höß) என்பவர். சுமார் 3 மில்லியன் மக்கள் இம்முகாமில் அவரது மேற்பார்வையில் கொல்லப்பட்டதாக இவர் பின்னர் நடந்த நுரம்பர்க் விசாரணைகளில் தெரிவித்திருந்தார். எனினும் அவர் இவ்வெண்ணிக்கையை பின்னர் 1.1 மில்லியன் எனக் குறைத்திருந்தார்[2]. இவர்களில் 90 விழுக்காட்டினர் யூதர்கள் ஆவர்[3]. யூதர்களை விட கம்யூனிஸ்டுகள், ருஷ்யப் போர்க் கைதிகள், ஓரினச்சேர்க்கையாளர்கள், சிலாவ் இனத்தவர்கள், நாடோடிகள், அரசியல் அதிருப்தியாளர்கள் ஆகியோரும் ஏராளமான எண்ணிக்கையில் இருந்தார்கள்.
ஐரோப்பாவின் பல நாடுகளிலும் இருந்து கைது செய்யப்பட்ட யூதர்கள் தொடருந்துகளிலும் வேறு வாகனங்களிலும் கூட்டம் கூட்டமாக மிகக் கடுமையான நெரிசலில் கொண்டுவரப்பட்டு இங்கு அடைக்கப்பட்டனர். உழைக்கக்கூடியவர்கள், உழைக்க முடியாதவர்கள், மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பயன்படக்கூடியவர்கள் என்று பல தேர்வு நடக்கும். ஏனையோர் சைக்ளோன்-பி என்ற பூச்சிக் கொல்லியாகப் பயன்பட்டு வந்த நச்சு வாயு பரவிய அறைகளில் அடைக்கப்படுக் கொலை செய்யப்பட்டார்காள். குழந்தைகள் தாய்களிடமிருந்து பிரிக்கப்பட்டு வயதான பெண்களுடன் சேர்த்து நச்சுவாயு அறைகளுக்கு அனுப்பப்பட்டார்கள். மற்றும் பலர் கடும் உழைப்பு, ஊட்டச் சத்து இல்லாத உணவு, சுத்தமின்மை, பட்டினி, தொற்று நோய், தனிப்பட்ட மரண தண்டனைகள், மருத்துவப் சோதனைகள் போன்ற பல காரணிகளால் இறந்தனர்.
அவுஷ்விட்ஸ்-பிர்க்கெனாவு Auschwitz-Birkenau ஜேர்மன் நாசி வதை முகாம் (1940-1945)* | |
---|---|
யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களம் | |
நாடு | போலந்து |
வகை | கலாசாரம் |
ஒப்பளவு | vi |
மேற்கோள் | 31 |
பகுதி† | ஐரோப்பா |
பொறிப்பு வரலாறு | |
பொறிப்பு | 1979 (3வது அமர்வு) |
* பெயர் உலக பாரம்பரியப் பட்டியலில் குறித்துள்ளபடி. † பகுதி, யுனெஸ்கோவினால் வகைப்படுத்தப்பட்டபடி. |
1. விடுதலை
நவம்பர் 1944 இல் சோவியத் படைகள் முன்னேறி வந்துகொண்டிருந்தபோது அவர்களிடமிருந்து தங்கள் குற்றங்களை மறைக்க நாசிகள் பிர்க்கெனாவு நச்சுவாயு அறைகளைக் குண்டு வைத்துத் தகர்த்தார்கள். 1945 ஜனவரியில் நாசிகள் அந்த முகாம்களைக் கைவிடத் தொடங்கியிருந்தார்கள். ஜனவரி 27, 1945 இல் கிட்டத்தட்ட 7,500 கைதிகளைச் சோவியத் செம்படையினர் மீட்டார்கள். மே 7, 1945 இல் ஜெர்மனி சரணடைந்தது. நுரம்பர்க் விசாரணை தொடங்குவதற்கு முன் ஹிட்லர் தற்கொலை செய்துகொண்டார்.