தலையணை அளவில் இருக்கும் அகராதியின் பக்கங்களை புரட்ட யாருக்கு இப்போது நேரமிருக்கிறது. ஆன்லைனில் தட்டி அர்த்தம் பார்ப்பது அதிகரித்து விட்டதால், உலகப் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு
அகராதி இனி அச்சில் வெளிவராது என்று அதன் பதிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
ஆங்கில அகராதி என்றாலே ஆக்ஸ்போர்டை தேடு என்று கூறுமளவு பிரபலமானது, இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழக பிரஸ் வெளியிடும் அகராதி. ஆரம்பத்தில் 60 கிலோ எடை வரை இருந்த தலையணை சைஸ் புத்தகம் அது. நாளடைவில் ஸ்லிம் ஆகி விட்டாலும், பாக்கெட் டிக்ஷனரி முதல் பல தொகுதிகள் வரை என ஆங்கில ஆராய்ச்சியாளர்களுக்கு கைகொடுத்து வருகிறது.
கால மாற்றத்துக்கு ஏற்ப, அந்த அகராதியும் டிஜிட்டல் வடிவமாக்கப்பட்டது. சந்தா கட்டி இன்டர்நெட்டில் பட்டனை தட்டி அர்த்தம் பார்த்துக் கொள்ளும் வசதி அளிக்கப்பட்டது. இப்போது புத்தகம் புரட்டுவது குறைந்து கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பில் பழியாக கிடப்பது பழகி விட்டதால், ஆன்லைன் ஆக்ஸ்போர்டு அகராதிக்கு அமோக ஆதரவு கிடைத்துள்ளது. அமெரிக்காவில் அதை ஆன்லைனில் பார்ப்பதற்கு ஆண்டு கட்டணம் ஸி13,800. அதை மாதம்தோறும் பார்ப்பவர்கள் 20 லட்சம் பேர். இதனால், அதன் சமீபத்திய 20 புத்தக தொகுப்புகளை ஸி54,750 செலவழித்து வாங்குவோர் குறைந்து விட்டனர்.
உலகம் முழுவதும் 30,000 தொகுப்புகளே விற்பனையாகி உள்ளன. ஆக்ஸ்போர்டு அகராதி விற்பனை மளமளவென கடந்த சில ஆண்டுகளில் சரிந்து விட்டதால் அதை அச்சிடுவதை கைவிட ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக பிரஸ் முடிவு செய்துள்ளது. இதுபற்றி அது நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘‘ஆன்லைன் அகராதிக்கு அதிக ஆர்டர்கள் வருகிறது. மாறாக, அச்சு பதிப்பு விற்பனை குறைந்து விட்டது. எனவே, அடுத்த ஆண்டு முதல் அச்சிடுவது நிறுத்தப்படும்’’ என்று கூறப்பட்டுள்ளது.