நம்பிக்கை: கண்ணீர் கண்களி லிருந்து மட்டும்தான் வழிகிறது.
உண்மை: நீங்கள் அழும்போது, உங்கள் மூக்கில் ஒழுகிக் கொண்டே இருக்கும். உங்கள் கண்ணிரில் சில துளிகள் கண்ணிலேயே தேங்கி யிருந்து, பின்னர் ஒரு மூக்குடன் இணைக்கப்பட்டுள்ள சிறு குழாய் மூலம் மூக்கிற்குள் செல்வதுதான் இதன் காரணம். உங்கள் மூக்கைத் துடைத்துக் கொண்டால், உங்கள் கண்ணீரும் வறண்டுபோகும்.
நம்பிக்கை: எதையாவது வெறித்துப் பார்க்கும்போது உங்கள் கண்கள் அசைவின்றி இருக்கின்றன
உண்மை: நீங்கள் உற்றுப் பார்த் தாலும் சரி, வெறித்துப் பார்த்தாலும் சரி உங்கள் கண்கள் நகர்ந்து கொண்டுதான் இருக்கும். உங்கள் கண்களில் இருக்கும் தசைகள் நாளொன்றுக்கு 1,00,000 முறை நகர்கின்றன. அவை எப்போதும் அசையாமல் நின்று போவதில்லை. நீங்கள் உறங்கும்போதும் அவை அசைகின்றன. கண்களின் அசைவி லிருந்து கனவு பற்றி விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்கின்றனர்.
நம்பிக்கை: அனைத்து சுவை மொட்டுகளும் நாக்கில் மட்டுமே உள்ளன..
உண்மை: உங்கள் நாக்கில் இருக்கும் 9,000 சுவை மொட்டுகளுடன் வாயின் மேற்புறத்திலும், தொண்டையின் பின்புறத்திலும் கூட சுவை மொட்டுகள் இருக்கின்றன.
பட்டாம்பூச்சி மற்றும் சில பூச்சிகளின் சுவை மொட்டுகள் அவற்றின் கால்களின் கீழ்புறத்தில் இருக்கின்றன. அவற்றின் உடலின் மீதுள்ள சிறு மயிர் துவாரங்களின் வழியாக அவை இனிப்பையும், கசப்பையும் கூட அவை சுவைக்கின்றன.
நம்பிக்கை: மச்சம், மரு போன்ற கருப்புப் புள்ளிகளை எலுமிச்சை சாறு அகற்றுகிறது.
உண்மை: மச்சங்களை எவற்றாலும் நீக்க முடியாது; விலை உயர்ந்த அழகு சாதனங்களாலும் கூட முடியாது. மச்சம், மரு போன்றவைகளின் செல்கள் தோலின் அடியில் இருக்கின்றன. எலுமிச்சை சாறால் இவற்றை நீக்க முடியாது. இந்த மச்சங்களை தேய்த்து அழிக்க நினைப்பதை விட்டு, எலுமிச்சைச் சாறைக் குடித்து விட்டு, மச்சங்கள் கவர்ச்சியாக இருப்பதாக பலர் கருதுவதை நினைத்துப் பார்த்துக் கொள்ளுங்கள்.
நம்பிக்கை: ஆண்களை விட பெண்களுக்கு ஒரு விலா எலும்பு அதிகமாக இருக்கிறது.
உண்மை: இது சரியல்ல. ஆண், பெண் அனைவருக்கும் 12 ஜோடி விலா எலும்புகள் உள்ளன. ஆதி காலம் தொட்டு பெண்களைப் போன்ற அதே எண்ணிக்கை கொண்ட விலா எலும்புகள்தான் ஆண்களுக்கும் உள்ளன.
நம்பிக்கை: நீங்கள் உண்ணும்போதும், பேசும்போதும் உங்களின் தாடைகள் இரண்டும் இயங்குகின்றன.
உண்மை: தலையை அசைக்காமல் உங்கள் மேல் தாடையை நகர்த்த முயன்று பாருங்கள். மேல் தாடை நகர முடியாதபடி பொருத்தப் பட்டிருக்கிறது. உங்கள் தலையை அசைக்காமல் வைத்துக் கொண்டு உங்கள் கீழ் தாடையை உங்களால் அசைக்க முடியும். அதற்காக உங்கள் மேலுதட்டை இறுக்கமாக வைத்துக் கொள்ளத் தேவையில்லை.
நம்பிக்கை: முழங்கை நரம்பு என்பது உங்கள் முழங்கையில் உள்ள ஒரு எலும்புதான்.
உண்மை: முழங்கையில் உள்ள நரம்பு எலும்பு அல்ல. கையின் மேல் எலும்புக்கும் கீழே ஓடுவது இந்த நரம்பு இது. தமாஷ் நரம்பு என்று அழைக்கப்படுகிறது. ஆனால் இந்த நரம்பு எதன் மீதாவது இடித்துக் கொண்டால் நீங்கள் உணரும் வலி தமாஷானது அல்ல.
நம்பிக்கை: உடலில் உள்ள பாகங்களில் மிகவும் கடினமானது எலும்புதான்.
உண்மை: உங்கள் பல்லின் மேற்புறத்தில் உள்ள எனாமல், எலும்வை விட கடினமானது. ஆனால், எலும்புகளைப் போல் எனாமல் உடைந்து போகும் போது அவற்றை சரி செய்ய முடியாது.
நம்பிக்கை: 120 வயதுக்கு மேலும் வாழக்கூடிய மக்கள் இருக்கிறார்கள்.
உண்மை: 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த செயின்ட் ஜெர்மைன் பிரபு என்ற பிரெஞ்சுக்காரர் தனக்கு 2,000 வயது ஆவதாகக் கூறிக் கொள்வார்; மக்கள் பலரும் அதை நம்பினர். தனது உண்மையான வயதை வெளிப்படுத்த மறுத்த அவரது வேலைக்காரன், தான் 500 ஆண்டு காலமாக பிரபுவுக்கு சேவை செய்வதாக பெருமையாகக் கூறினான். சீனாவின் லி சுங்-யுன் தனது 256 வயதில் 1933 இல் இறந்ததாகக் கூறப்படுகிறது.
இவை தவிர, நுண்ணியிரிகள் கலந்த பால், பழரசங்களை உண்டு வந்த தெற்கு ரஷ்ய மக்கள் அதிக நாள் வாழ்ந்ததாகக் கூறிக் கொண்டாலும், 115 ஆண்டுகளுக்கு மேல் எவர் ஒருவரும் வாழ்ந்ததற்கான சான்றுகள் இல்லை. வழக்கமான 120 வயதுக்கு மேல் ஆனதாகக் கூறிக் கொள்பவர்கள் உலகில் எளிதில் அடைய முடியாத உள்பகுதிகளில் வாழ்பவர்கள்; அவர்கள் பிறப்புக்கு எந்த சான்றிதழும் வைத்திருக்கப் படவில்லை.
நம்பிக்கை: உங்கள் கை நகங்கள் அனைத்தும் ஒரே சீராக வளர்கின்றன..
உண்மை: நீங்கள் வலது கைப் பழக்கம் உள்ளவராக இருந்தால், உங்கள் வலது கை நகங்கள் இடது கை நகங்களை விட வேகமாக வளரும்.
நீங்கள் இடது கைப் பழக்கம் உள்ளவராக இருந்தால் இடது கை நகங்கள் வலது கை நகங்களை விட வேகமாக வளரும்.
நம்பிக்கை:முகத்தைச் சுழிப்பதற்குத் தேவைப்படும் அதே அளவு முயற்சிதான் புன்னகைக்கவும் தேவைப்படுகிறது.
உண்மை: நீங்கள் புன்னகைக்கும்போது 17 தசைகள் செயல்படுகின்றன. ஆனால் முகத்தைச் சுளிப்பதற்கு நாற்பத்தி மூன்று தசைகள் இயங்க வேண்டும். அதனால் முகத்தைச் சுளிக்காமல் புன்னகையுங்கள். தசைகளின் வேலையாவது குறையும்.
from periyarpinju.com