ரோமானியப் பேரரசு நிறுவிய அகஸ்டஸ் சீசர் வரலாற்றில் தலைமை சான்ற பெரியார்களில் ஒருவராவார். கி.மு. முதல் நூற்றாண்டில் ரோமானியக் குடியரசைச் சீர் குலைத்த உள்நாட்டுப் போர்களை இவர் முடிவுக்குக் கொண்டு வந்தார். ரோமானியப் பேரரசின் அரசைச் செம்மையாக சீரமைத்து இரு நூற்றாண்டுக் காலம் இப்பேரரசு உள்நாட்டு அமைதியோடும், செல்வச் செழிப்போடும் விளங்குவதற்கு அடிகோலினார்.
இவருடைய உண்மைப் பெயர் காயஸ் ஆக்டேவியஸ் ஆகும். ஆக்டேவியஸ் என்ற பெயரே பெரும்பாலும் இவருக்கு வழங்கி வந்தது. அகஸ்டஸ் என்ற பட்டப் பெயர், இவரது 31 ஆம் வயதில் தான் இவருடைய பெயருடன் இணைந்தது. இவர். கி.மு. 63 ல் பிறந்தார். அப்போது ரோமில் முன்னணி அரசியல் தலைவராக விளங்கிய ஜூலியஸ் சருக்கு உடன் பிறந்தவனின் மகளுடைய மகன் இவர். ஜூலியஸ் சீசருக்குச் சொந்த மகன் யாரும் இல்லை. அவர் இளைஞர் ஆக்ஸ்டேவியஸ் மீது அன்பு கொண்டிருந்தார். எனவே, அக்டேவியசுக்கு இராணுவத்திலும், அரசியலிலும் பயிற்சியளித்து, இவரை அரசியல் தலைமையை ஏற்கும், தகுதியுடையவராக உருவாக்கினார். ஆழ்ந்த எண்ணங்களும், உறுதியான உள்ளமும் படைத்த அக்டேவியஸ் படிப்படியாக முன்னணிக்கு வந்து,சீசரின் தத்துப் புதல்வனாகவும் ஆனார். கி.மு. 41 இல் ஜூலியஸ் சீசர் கொலையுண்டு மாண்டபோது, அக்டேவியஸ் 18 வயது மாணவராகவே இருந்தார். சீசர் இறந்த பின்பு, ரோமப் பேரரசின் ஆட்சியைப் பிடிப்பதில் இராணுவத் தளபதிகளுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் இடையே நீண்ட காலம் கடும் போராட்டம் நடந்தது. அக்டேவியசின் அரசியல் எதிரிகள், ரோமானியப் பேரரசின் கொந்தளிப்பான அரசியல் அரங்கில் நீண்ட அனுபவம் பெற்ற பழுத்த அரசியல்வாதிகளாக இருந்தனர். அவர்கள் முதலில், இளைஞன் அக்டேவியசை ஓர் அச்சுறுத்தலாகவே கருதவில்லை. ஜூலியஸ் சீசர் தத்துப் புதல்வன் என்ற தகுதி மட்டும் தான் அக்டேவியஸ் மிகத் திறம்படப் பயன்படுத்திக் கொண்டு, சீசருடன் மிக நெருக்கமாக இருந்த சில படைத் தலைவர்களைத் தம்முடைய ஆதரவாளர்களாக மாற்றுவதில் வெற்றி கண்டார். எனினும், சீசரின் படையினரில் பலர் ஆதரித்தனர். அடுத்த சில ஆண்டுகளில் பல போர்களில் தமது அரசியல் எதிரிகளை ஒவ்வொருவராக அக்டேவியஸ் தோற்கடித்தார்.
ஆன்டனி மட்டும் இன்னும் எஞ்சியிருந்தார். ஆன்டனியுடன் அக்டேவியஸ் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டு, ரோமானியப் பேரரசின் அதிகாரத்தை அவருடன் பகிர்ந்து கொண்டார். ரோமானியப் பேரரசின் கிழக்குப் பகுதியை ஆன்டனி தம் ஆட்சியில் வைத்துக் கொண்டார். மேற்குப் பகுதியை அக்டேவியஸ் ஆண்டு வந்தார். இருவருக்குமிடைய சில ஆண்டுகள் வரை அமைதியற்ற போர் நிறுத்தம் நிலவியது. இந்தப் போர் நிறுத்தக் காலத்தின் போது, ஆன்டனி, கிளியோபாட்ராவுடன் காதல் கேளிக்கைகளில் அதிகக் கவனம் செலுத்தி வந்தார். அதே சமயம் அக்டேவியஸ் தமது வலிமையைப் படிப்படியாகப் பெருக்கிக் கொண்டிருந்தார். கடைசியாக கி.மு. 32 இல் இருவருக்குமிடையே போர் மூண்டது. கி.மு. 31 இல் நடந்த ஆக்டியம் கடற்போரில் அக்டேவியஸ் பெரும் வெற்றி பெற்றார். இந்தப் போர், இவ்விருவருக்குமிடையிலான அதிகாரப் போட்டிக்கு இறுதியாக முற்றுப் புள்ளி வைத்தது. அடுத்த ஓராண்டுக்குள் அக்டேவியஸ் முழு வெற்றி பெற்றதும் போர் நின்றது. ஆன்டனியும் கிளியோபாட்ராவும் தற்கொலை செய்து கொண்டு மாண்டனர்.
அக்டேவியஸ் இப்போது, 50 ஆண்டுகளுக்கு முன்னர் ஜூலியஸ் சீசர் பெற்றிருந்த அதே அதிகாரத்தையும் வலிமையையும் பெற்றிருந்தார். ரோமானியப் பேரரசில் நடைபெற்று வந்த குடியரசு ஆட்சி முறையை ஒழித்து விட்டு, தாம் மன்னராக முடி சூட்டிக் கொள்ள சீசர் விரும்பியதாகத் தோன்றியபோது, அவர் கொலை செய்யப்பட்டார். கி.மு. 30-க்குள் பல உள்நாட்டுப் போர்கள் நடந்தன. ரோமாபுரியில் குடியரசு முறையிலான பல அரசுகள் தோல்வியடைந்தன. பெயரளவில் ஒரு குடியரசு ஆட்சியை வைத்துக் கொண்டு இரக்க மனப்பான்மை கொண்ட ஓர் சர்வாதிகார ஆட்சியை (Benevolent Dictatorship) ஏற்றுக் கொள்ள ரோமானிய மக்கள் தயாராக இருந்தனர்.
ஆட்சியைப் பிடிப்பதற்கான போராட்டத்தில் அக்டேவியஸ் ஈவிரக்கமின்றி நடந்து கொண்டபோதிலும், அவர் தமது அதிகாரத்தை நிலைநாட்டிய பின்பு, மிகவும் சமரச மனப்போக்குடன் நடந்து கொண்டார். ரோமானிய குடியரசின் ஆட்சிப் பேரவையினரின் (Senators) உணர்ச்சிகளைச் சாந்தப்படுத்துவதற்காக இவர். கி.மு. 27 இல் நாட்டில் மீண்டும் குடியரசை ஏற்படுத்தப் போவதாக அறிவித்தார். அத்துடன் தமது அரசப் பதவிகள் அனைத்திலிருந்தும் விலகிவிடவும் முன் வந்தார். எனினும், ஸ்பெயின், கால், சிரியா ஆகிய மாகாணங்களின் தலைமைப் பொறுப்பைத் தாமே வைத்துக் கொண்டார். ரோமானியப் படைகளில் பெரும்பாலானவை இந்த மூன்று மாகாணங்களிலும் இருந்தன. எனவே, நடைமுறையில் அதிகாரம் இவருடைய கைகளிலேயே பத்திரமாக இருந்தது. குடியரசின் ஆட்சிப் பேரவை இவருக்கு அகஸ்டஸ் என்ற பட்டப் பெயரைச் சூட்டியது. ஆனால், இவர் அரசர் என்ற பட்டத்தை ஒரு போதும் ஏற்றுக் கொள்ளவில்லை. ரோமானியப் பேரரசுப் பெயரளவில் இன்னும் குடியரசாகவே இருந்தது. அகஸ்டஸ் முதல் குடிமகன் என்ற நிலையிலேயே ஆட்சி புரிந்து வந்தார். ஆனால், நடைமுறையில் நன்றியும் பணிவிணக்கமும் உடையதாக இருந்த ஆட்சிப் பேரவை, அகஸ்டசை அவர் விரும்பிய எல்லாப் பதவிகளிலும் நியமித்தது. அவர் தமது எஞ்சிய ஆயுட்காலம் முழுவதிலும் உண்மையில், ஒரு சர்வாதிகாரியாகவே விளங்கினார். இவர் 70 ஆம் வயதில் கி.பி. 14 இல் இறந்தபோது, ரோமானியப் பேரரசு குடியரசு முறையிலிருந்து முற்றிலுமாக முடியாட்சி முறைக்கு மாறி விட்டிருந்தது. எனவே, இவருக்குப் பிறகு இவரது தத்துவப் புதல்வன் எவ்விதச் சிரமமுமின்றி ஆட்சிப் பீடம் ஏறினார். தொடர்ந்து இவரது மரபினர் பலர் ரோமானியப் பேரரசர்களாக ஆண்டனர்.
உலக வரலாற்றில் இரக்க மனப்பான்மை கொண்ட ஓர் சர்வாதிகாரிக்கு அகஸ்டஸ் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறார். அவர் தேர்ந்த அரசியல் மேதையாகவும் திகழ்ந்தார். அவரது சமரச கொள்கைகள், ரோமானிய உள்நாட்டுப் போர்களினால் விளைந்த பெரும் பிளவுகளை நீக்குவதற்கு உதவின. ரோமானியப் பேரரசை நாற்பதாண்டுகளுக்கு மேல் அகஸ்டஸ் ஆண்டார். அவருக்குப் பின்னரும் பல ஆண்டுகள் வரை அவருடைய கொள்கைகள் இப்பேரரசில் செல்வாக்குப் பெற்றிருந்தன. அவருடைய ஆட்சிக் காலத்தில் ரோமானியப் படைகள், ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, கவாஷ’யா ஆகிய நாடுகளையும் பால்க்கன் நாடுகளில் பெரும்பகுதிகளையும் வென்றன. அவருடைய ஆட்சியின் இறுதிக் காலத்தில் ரோமானியப் பேரரசின் வட எல்லை ரைன்-டான்யூப் கோடு வரை நீடித்திருந்தது. அடுத்த சில நூற்றாண்டுகள் வரையிலும் இந்த வட எல்லைக் கோடு மாறவே இல்லை.
அகஸ்டஸ் இணையற்ற திறமை வாய்ந்த நிருவாகியாக விளங்கினார். நாட்டில் திறன் வாய்ந்த ஆட்சிப் பணி முறையை நிறுவினார். வரி அமைப்பு முறையைத் திருத்தியமைத்தார். ரோமானிய அரசின் நிதியமைப்பு முறையையும் சீர்திருத்தியமைத்தார். ரோமானிய இராணுவத்தைப் பெரிதும் மாற்றியமைத்தார். நிலையான கடற்படை ஒன்றையும் நிறுவினார். ரோமானியப் பேரரசின் மெய்க் காவல் படை (Praetorian Guard) ஒன்றையும் ஏற்படுத்தினார். இந்தப் படை பிந்திய நூற்றாண்டுகளில் பேரரசர்களை தெரிந்தெடுப்பதிலும், பதவியிலிருந்து அகற்றுவதிலும் பெரும் பங்கு கொண்டது.
அகஸ்டஸ் ஆட்சிக் காலத்தில், ரோமானியப் பேரரசு முழுவதிலும், நேர்த்தியான நெடுஞ்சாலைகள் ஏராளமாகப் போடப்பட்டன. ரோம் நகரில் பல அரசுக் கட்டிடங்கள் எழுப்பப்பட்டன. நகரம் பெருமளவுக்கு அழகுப்படுத்தப் பட்டது. பல கோயில்கள் கட்டப்பட்டன. பண்டைய ரோமானியச் சமயத்தை அகஸ்டஸ் ஆதரித்தார். அந்தச் சமயத்தைத் தழுவுவதை ஊக்குவித்தார். திருமணம் புரிந்து கொண்டு, குழந்தைகள் பெற்று குடும்பம் நடத்துவதை ஊக்குவிக்கும் சட்டங்கள் இயற்றினார்.
கி.மு. 30 முதற்கொண்டு, அகஸ்டஸ் ஆட்சியில் ரோமானியப் பேரரசில் உள்நாட்டு அமைதி நிலவியது. இதனால், நாட்டின் செல்வமும், வளமும் செழித்தோங்கின. கலைகள் ஓங்கி வளர்ந்தன. ரோமானிய இலக்கியத்தில் அகஸ்டஸ் காலம் ஒரு பொற்காலமாக விளங்கியது. தலை சிறந்த ரோமானியக் கலைஞர் வர்ஜில் இந்தக் காலத்தில் தான் வாழ்ந்தார். ஹோராஸ், லிவி போன்ற வேறு பல எழுத்தாளர்களும் இந்தக் காலத்தில் தான் வாழ்ந்திருந்தார்கள். ஒவிட் என்ற எழுத்தாளர் ஏனோ அகஸ்டசின் žற்றத்திற்கு ஆளானார். அவர் ரோமிலிருந்து நாடு கடத்தப்பட்டார். அகஸ்டசுக்குச் சொந்தப் புதல்வர்கள் இல்லை. அவருடைய மருமகளும், இரு பேரப் பிள்ளைகளும் அவருக்கு முன்னரே இறந்துவிட்டனர். எனவே, அவர் தம் மனைவிக்கு முதற் கணவனால் பிறந்த மகனைத் தத்து மகனாக ஏற்றுக் கொண்டார். டைபீரியஸ் என்ற இந்தத் தத்து மகனையே தமது வாரிசாக நியமித்தார். இந்த அரச மரபில் பின்னர், காலிகுலா, நீரோ போன்ற அரசர்கள் ஆண்ட போதிலும், இந்த மரபு விரைவிலேயே அற்றுப் போயிற்று, எனினும் அகஸ்டஸ் ஆட்சியுடன் தொடங்கிய உள்நாட்டு அமைதி இருநூறு ஆண்டுகள் நீடித்தது. அமைதியும், வளச்செழிப்பும் மிகுந்த இந்த 200 ஆண்டுக் காலத்தில், அகஸ்டஸ், மற்ற ரோமானியத் தலைவர்கள் வெற்றி கொண்ட நாடுகளில் ரோமானியப் பண்பாடு ஆழவேரூன்றி ஆல்போல் பரந்து விரிந்தது. பண்டைக் காலப் பேரரசுகள் அனைத்திலும் மிகவும் புகழ் வாய்ந்தது ரோமானியப் பேரரசேயாகும். பண்டைய நாகரிகத்தின் உச்ச நிலையாக ரோமானியப் பேரரசு விளங்கியது. எகிப்தியர்கள், பாபிலோனியர்கள், யூதர்கள். கிரேக்கர்கள் போன்ற பண்டைய உலக மக்களின் கொள்கைகளையும், பண்பாட்டுச் சாதனங்களையும் மேற்கு ஐரோப்பாவுக்குப் பரப்புகின்ற வடிகாலாகவும் ரோமானியப் பேரரசு திகழ்ந்தது.
அகஸ்டஸ் சீசரின் கொள்ளுப் பாட்டனாகிய ஜூலியஸ் சீசரின் சாதனைகளுடன் அகஸ்டசின் சாதனைகளை ஒப்பிட்டுப் பார்ப்பது சுவையானதாகும். அகஸ்டஸ் அழகிய தோற்றமுடையவர்; அறிவாற்றலில் சிறந்தவர்; நல்லொழுக்க முடையவர்; பல இராணுவ வெற்றிகளைக் கண்டவர்; எனினும், முந்தைய சீசருக்கு இருந்த கவர்ச்சி இவருக்கு இல்லை. ஜூலியஸ் தம் காலத்தவரின் கற்பனையை அகஸ்டசை விட அதிகமாகத் தூண்டினார். அதனால் அவர் தமது புகழ் சிறிதும் குன்றாமல் அதிகப் புகழுடன் விளங்கினார். ஆனால், வரலாற்றில் அவர்களுடைய செல்வாக்கினை மதிப்பிட்டுப் பார்க்கும் போது, இந்த இருவரிலும் அகஸ்டஸ் தான் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவராகத் திகழ்கிறார்.
அகஸ்டசை மகா அலெக்சாந்தருடன் ஒப்பிட்டுப் பார்ப்பதும் நலமாக இருக்கும். இருவரும் மிக இளம் வயதிலேயே தங்கள் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார்கள். ஆயினும், அகஸ்டஸ் தலைமையிடத்தை எட்டுவதற்கு அலெக்சாந்தரைவிடக் கடுமையான எதிர்ப்புகளைச் சமாளிக்க வேண்டியிருந்தது. அகஸ்டசின் இராணுவத் திறன், அலெக்சாந்தரின் அளவுக்குச் சிறப்புடையதாக இருக்கவில்லை. எனினும், அவருடைய திறமை முனைப்பாகவே இருந்தது. அகஸ்டசின் வெற்றிகள் நீண்ட காலம் நிலைத்திருந்தன. இது இவ்விருவருக்குமுள்ள மிக முக்கிய வேறுபாடாகும். அகஸ்டஸ் எதிர்காலத்திற்காக மிகவும் கவனமாகத் திட்டமிட்டுச் செயற்பட்டார். அதன் விளைவாகவே, அவருடைய செல்வாக்கு மனித வரலாற்றில் கணிசமான அளவுக்கு நீண்ட காலம் நிலைபெற்று விளங்கியது.
அகஸ்டசை மா-சே-துங்குடன் அல்லது ஜார்ஜ் வாஷ’ங்டனுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதும் பொருத்தமாக இருக்கும். இந்த மூவருமே உலக வரலாற்றில் முக்கியமான ஓரளவு ஒரே மாதிரியான பங்குப் பணிகளை ஆற்றினர். எனினும், அகஸ்டசின் நீண்ட கால ஆட்சி, அவரது கொள்கைகளின் வெற்றி, உலக வரலாற்றில் ரோமானியப் பேரரசுக்கு ஏற்பட்ட முக்கியத்துவம் ஆகியவற்றின் காரணமாக, மற்ற இருவரையும்விட உயர்நிலையில் வைக்கத் தக்கவர் அகஸ்டஸ் எனலாம்.