Tuesday, 17 August 2010

காந்தி செய்த துரோகம்

ஒரு ரசிகனின் மனோபாவத்தோடும்,ஒரு பக்தனின் நம்பிக்கையோடும் புனையப்பட்ட வரலாறுகள் நம்முன்னே குவிந்து கொண்டிருக்கும் நேரத்தில் இதோ,ஓர் ஆராய்ச்சியாளனின் சிரத்தையோடும் நேர்மையோடும் அளிக்கப்படும் வரலாற்று சான்றுகள். தனது வாழ்நாள் முழுவதும் தேச மக்களுக்கும், புரட்சிகர இயக்கங்களுக்கும் காங்கிரசும், காந்தியும் செய்த துரோகங்கள் கொஞ்சமல்ல.இந்த காந்தியையே 'மகாத்மா' என்றும் 'தேசத்தந்தை' என்றும் இந்தியப் பூர்ஷுவாக்கள் நம் தோளிலே தூக்கி வைக்கிறார்கள்.
1885-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28-ம் நாள், பம்பாய் நகரத்தில், கோகுல்தாஸ் தாஜ்பால் சமஸ்கிருதக் கல்லூரியில், வங்கத்தைச் சேர்ந்த உமேஷ் சந்திர பானார்ஜியின் தலைமையில், இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் முதல் மாநாடு நடந்தது. 'காங்கிரஸின் தந்தை' எனப்பெயர் பெற்ற ஆலன் ஆக்டேவியன் ஹ்யூம் என்னும் ஆங்கிலேய அதிகாரி தான் காங்கிரஸ் கட்சியை உருவாக்கியவர். "படிப்பறிவு கொண்ட பிரிட்டிஷ் விசுவாசிகளை" அரசாங்கத்துக்கு ஆதரவாக ஒன்று திரட்டுவதே காங்கிரஸை உருவாக்குவதே அவருடைய நோக்கமாக இருந்தது. அவரே, தொடர்ந்து 20 வருடங்கள் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராகவும் இருந்தார். அவரது எண்ணத்திற்கேற்பவே, காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் மிகுந்த 'ராஜ விசுவாசம்' உடையவர்களாக விளங்கினர்.1886-ஆம் ஆண்டு கல்கத்தாவில்( இன்றைய கோல்கத்தாவில்) நடைப்பெற்ற 2-வது காங்கிரஸ் மாநாட்டின் முதல் தீர்மானத்தை அதற்கு ஒரு எடுத்துக் காட்டாக நாம் கொள்ளலாம். அத்தீர்மானவது:-



"மஹாராணியின் அனுகூலமான என்றும் மறப்பர்கரிய, கீர்த்திமிக்க ஆட்சியில் 50 வருஷம் முடிவுபெற்றதைக் குறித்துச் சக்கவர்த்தினியிடம் கடமைப்படி உண்மையான மகிழ்ச்சிகள் தெரிவிப்பதுடன், பாரததேசத்தின் எல்லாப் பகுதிகளினிறும் பிரதிநிதிகள் வந்து கூடிய இந்த ஜனசபை பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தின் மீது அம்மகாராணி இன்னும் பல பல வருஷம் ஆள வேண்டுமென்று வாழ்த்துகிறது."



மஹாராணியார் பல பல வருஷம் வாழவேண்டுமெண்று கூட இல்லை,பல பல வருஷம் நம்மை ஆள வேண்டுமென்றே நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம், ஆங்கிலேயர்களை வெகுவாக மகிழ்வித்து இருக்கும். ஆக, இந்திய விடுதலையை மனதில் கொண்டு, உருவாக்கப்பட்ட இயக்கமன்று காங்கிரஸ் கட்சி என்பது தெளிவாகிறது. கலப்படமற்ற ராஜவிசுவாசத்திலிருந்து, தங்களின் தேச மக்கள் தேவைகளுக்காக அரசாங்கத்திடம் மனுப்போடும் அடுத்த கட்டத்திற்கு காங்கிரஸ் வந்தது. 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வலதுசாரித் தீவரவாதி தலைவர்களான திலகர், வ.உ.சி.,அரவிந்தர் முதலானோரால், காங்கிரஸ் கட்சியில் புதிய ஒளி கூடியது. 1917 -ஆம் ஆண்டு சம்ப்ரான் சத்தியாகிரகத்திற்குப் பிறகு, காந்தியின் தலைமையில்,அரசாங்கத்திற்கு எதிரான ஒத்துழையாமை இயக்கம், வரிகொடா இயக்கம் முதலான போராட்டங்கள் நடைப்பெற்றன.



இறுதியாக 1942-ல் "வெள்ளையனே வெளியேறு" என்ற முழக்கத்தோடு தொடங்கிய கடைசிப் போரில், காங்கிரஸ் தொண்டர்கள் பலரும், அஹிம்சையில் நம்பிக்கையிழந்து, காந்தியின் பிடியிலிருந்து நழுவி, வன்முறைச் செயல்களில் இறங்கினர். இவ்வாறு இந்திய மக்கள் புரட்சிகர நடவடிக்கைகளில் நாட்டம் கொள்ளத் தொடங்கியுள்ளமையை நன்கு அறிந்து கொண்டதாலும், இரண்டாம் உலகப்போரில் தனக்கேற்ப்பட்ட பொருளாதார நெருக்கடிகளினாலும், இந்தியாவிற்குச் சுதந்திரம் வழங்க வேண்டிய கட்டாயத்திற்குப் பிரிட்டிஷ் அரசாங்கம் தள்ளப்பட்டது.1947 ல் இந்தியாவிற்கு அரசியல் விடுதலை கிடைத்தது. மேற்காணும், சுருக்கமான காங்கிரஸ் வரலாற்றில் எவ்வாறு இந்தியாவிற்குச் சுதந்திரம் கிடைத்தது என்பதை மட்டும் தெளிவாக அறிந்துகொள்ள இயலுகிறது.



புரட்சிகர இளைஞர்களின் நடவடிக்கைகளுக்கு எதிராக அறிக்கை விடுவதிலும், காங்கிரஸ் மாநாடுகளில் அவர்களைக் கண்டிக்கும் தீர்மானங்களை முன்மொழிவதிலும் மட்டுமே காந்தியார் மிகக் கவனமாக இருந்தார், எங்கே மக்களுக்கு உண்மை தெரிந்துவிடுமோயென்று! பகத்சிங்கைத் தூக்கிலிடத் தூண்டியதும், அதற்குத் தேதி குறித்ததும் காந்தியே என்பது, காந்தி-இர்வின் சந்திப்புகள், ஒப்பந்தங்கள், கடிதங்கள் மூலம் இங்கே நிருபிக்கப்பட உள்ளது.



தளர்ந்த போன காந்தியின் அஹிம்சை பற்றியும்,புரட்சி இயக்கத்தின் தேவை பற்றியும் சசிந்திரநாத் சன்யால் (இவர்,முதல் உலகப் போருக்கு முன்பாகவே புரட்சி நடவடிக்கைகளில் பங்கு கொண்டவர்:ராஷ் பிகாரி கோஷின் வலக்காரமாக விளங்கியவர்.) காந்தியாருக்கு எழுதிய கடிதம் வரலாற்றுப் புகழ்மிக்கது.அக்கடிதத்தின் முக்கியத்துவம் கருதி, சில பகுதிகள், கீழே தரப்படுகின்றன உங்களுக்காக.



"தங்களது சோதனைக்கு ஓர் ஆண்டு தேவை என்றீர்கள்.ஆனால் நான்கு முழு ஆண்டுகளுக்குத் தங்களது சோதனை நீண்டது.போதுமான அளவுக்கு முயன்று பார்க்கப்படவில்லை என்று தாங்கள் இன்னுமா சாதிக்க முயல்கிறீர்கள்? உண்மையில் தங்கள் திட்டம் தோற்றுத் தான் போய்விட்டது.ஆனால் அது இந்திய மக்களால் நேர்ந்ததன்று".



"தங்களிடம் தொலை நோக்கு என்பதே கிடையாது.ஒரு பலவீனமான வழக்குக்கு தாங்கள் வக்காலத்து வாங்குகிறீர்கள்". "நீங்கள் புரட்சியாளர்களை இரக்கமற்ற முறையில் விமர்சிக்கிறீர்கள்". உங்கள் கொள்கைகளிருந்தும், வழிமுறைகளிருந்தும் மாறுபட்டமைக்காக அவர்களைத் 'தேசத்தின் எதிரிகள்' என்று சொல்லும் அளவுக்குப் போயிருக்கிறீர்கள். புரட்சியாளர்கள் தங்கள் தாயகத்திற்காக அனைத்தையும் இழந்தவர்கள் .அவர்களுக்கு உங்களால் உதவமுடியாவிட்டாலும், குறைந்தது அவர்களிடம் கொடுமையைக் காட்டமலாவது இருங்களேன்".



இக்கடிதம் பல இளைஞர்களின் உணர்ச்சிகளையும், மனத்தாங்கலையும் பிரதிபலித்தது என்றே கூறவேண்டும். உண்மையும் அதுதான்.



காந்தியின் செல்வாக்கு,ஆங்கிலேயர்களை அடக்குவதைக் காட்டிலும், புரட்சியாளர்களின் வீரியத்தைக் குறைக்கவே மிகுதியும் பயன்பட்டது.



அஹிம்சை வழியில் போராடினால், 1921-ஆம் ஆண்டிற்குள் இந்தியா சுதந்திரமடைந்துவிடும் (India would be free by the midnight of December 31,1921) என்ற காந்தியின் வாக்கு பொய்த்துப் போனபின், 1922-ல் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி, இந்த மண்ணின் இளைஞர்களுக்கு புரட்சிகர நடவடிக்கைகளில் ஓர் ஆர்வத்தைத் தூண்டிவிட்டது.



புதிதாகப் புறப்பட்ட இந்தப் புயலில் இருந்துதான் பல நூற்றுக்கணக்கான புரட்சியாளர்கள் புறப்பட்டுவந்தனர். இவர்களை உருவாக்கிய அந்தப் புயல்,உத்திரபிர்தேசம், கோரக்பூர் மாவட்டத்தில், சௌரி சௌரா என்னுமிடத்தில் மையம் கொண்டிருந்தது.



பலரைச் சுட்டுக் கொன்றும், மிகப்பலரை அடித்து வீழ்த்தியும், காயப்படுத்தியும் வெறியாட்டம் நடத்திய சௌரி சௌரா போலிசாரின் அட்டூழியங்களைப் பொறுத்துக் கொள்ள முடியாத மக்கள்,குனிந்த தலை நிமிர்ந்தனர். உயிருக்குப் பயந்து ஓடிய 21 போலிசாரையும், காவல் நிலையத்திற்குள் வைத்து உயிரோடு கொளுத்திவிட்டனர்.



செய்தியறிந்த காந்தியார்,நாடு முழுவதும் நடந்து கொண்டிருந்த ஒத்துழையாமை இயக்கத்தை உடனே நிறுத்தும்படி உத்தரவிட்டார். யாரையும் கலந்தாலோசிக்கவில்லை. தான் இமாலயத் தவறு செய்துவிட்டதாக அறிக்கை விட்டார்.முடிவைக் காட்டிலும்,முறையே முக்கியமானது (Means not end) என்று தான் கருதுவதால், எக்காரணம் கொண்டும், எந்த நியாத்திற்காகவும், தன்னால் ஹிம்சையை ஆதரிக்க முடியாது என்று கூறினார்.



ஆனால், இதே காந்தியார்,முதல் உலகப்போரில், பென்லாண்ட் பிரபு,வெலிங்டன் பிரபு, ஜேம்ஸ் மெஸ்டன் ஆகியோரின் வேண்டுகோளுக்கு இணங்கி, பிரிட்டிஷ் ஏகாதிபத்திய இராணுவத்திற்கு ஆள் சேர்ப்பதற்குக் கூடத் தன்னாலியன்றவைகளைச் செய்துள்ளார் என்பது நாமறிந்த வரலாறேயாகும். வெள்ளைக்காரக் கவர்னர்களின் பேச்சை ஏற்றுக் கொண்டு,உலகப்போரில் தன்னையும், நாட்டு மக்களையும் பிணைத்துக் கொண்டது மட்டும் எவ்வாறு அஹிம்சையாகும்? போர் என்றாலே ஹிம்சைதான் என்று காந்தியாருக்குத் தெரியாத என்ன?





காந்தி-இர்வின் ஒப்பந்தத்தால் விளைந்த மற்றெந்தக் கேட்டினையும் விட மிகப்பெரியது, பகத்சிங்கும் அவர் தோழர்களும் தூக்கிலிடப்பட்ட சம்பவமே ஆகும். ஆம். இவ்வொப்பந்தத்திற்கும், பகத்சிங்கின் மரண தண்டனைக்கும் நேரிடையாகவே தொடர்பிருந்தமை இங்கு தெளிவுபடுத்தப்பட உள்ளது. சிறைச்சாலைக்குள் இருந்த மோதிலால் நேரு, ஜவஹர்லால் நேரு,சி.ஆர். தாஸ் முதலான காங்கிரசு தலைவர்களே கூட, காந்தியாரின் இச்செய்கையை ஏற்றுக் கொள்ளவில்லை. நேரு அவர்கள், சிறையிலிருந்தபடியே ஓர் அறிக்கை வெளியிட்டார்:-

"இந்தியாவில் எங்கோ ஒரு மூலையில் உள்ள ஏதோ ஒரு கிராமத்தில்,மக்கள் அடக்குமுறை தாளாமல், பலாத்காரத்தை உபயோகித்துவிட்டார்கள் என்பதற்காக, இந்திய சுதந்திரப் போரையே ஒத்தி வைப்பதா? ஆம் என்றால், காந்திஜி கூறும் அஹிம்சைக் கொள்கைகளில், எங்கோ ஒரு பெரிய கோளாறு இருக்கிறது என்றே எனக்குத் தோன்றுகிறது".................................................................



இந்தியா முழுவதும் ,எந்த ஒரு இடத்திலும், வன்முறைச் சம்பவமே நடக்காது என்று உத்தரவாதம் ஏற்பட்டால்தான் இயக்கத்தைத் தொடர முடியும் என்று காந்திஜி கருதுவாரானால், அவரது இயக்கமும் சரி, அஹிம்சைப் போராட்டமும் சரி,ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் வெற்றிபெறப் போவதில்லை. ஒரு அடிமை நாட்டு மக்களிடமிருந்து, அடக்கப்பட்ட,ஒடிக்கப்பட்ட மக்களிடமிருந்து, அப்படிப்பட்ட உத்தரவாதத்தைப் பெற எவராலும் முடியாது".



நேருவின் இந்த அறிக்கை, அனைத்து காங்கிரஸ் கட்சி தலைவர்களின் கருத்தாக இருந்தது.