Tuesday, 17 August 2010

ஜாலியன் வாலாபாக் படுகொலை- உதம் சிங்

ஜாலியன் வாலாபாக் படுகொலை என்ற ஒன்றை நமது சமூக அறிவியல் பாடங்களில் படித்திருக்கிறோம். கி.பி 1919 ஆம் ஆண்டு ஏபரல் 13 ல் மருத்துவர்கள் சத்யா பால், சய்புதீன் கிட்ச்லாவின் கைதைக் கண்டித்தும், பிரித்தானிய அரசுக்கு எதிராகவும் ஜாலியன் வாலாபாக் பூங்கா என்னும் இடத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கிட்டத்தட்ட இருபதாயிரம் மக்கள் கலந்து கொண்டனர். தீவிரமான சுதந்திர போராட்ட செயல்களில் ஈடுபட்டிருந்த இளைஞரான உதம்சிங் அப்போது மக்களுக்கு தண்ணீர் ஊற்றிக் கொடுக்கும் பணியிலிருந்தார்.



அந்நேரத்தில் 90 ராணுவ வீரர்கள் ஜெனரல் டயர் என்னும் அதிகாரியின் தலைமையில் அங்கே குழுமியிருந்தனர். சரியாக மாலை 5 15 மணிக்கு பொதுக்கூட்டம் நடந்து கொண்டிருந்த நேரத்தில் எந்தவித எச்சரிக்கையுமின்றி மக்களை நோக்கி சுட்டு வீழ்த்த டயர் கட்டளையிட்டான். பத்து நிமிடங்கள் சரசரவென பாய்ந்த குண்டுகள் ஆயிரக்கணக்கானவர்களின் உடல்களை துளைக்க ஆரம்பித்தது. வெளியே செல்ல ஒரே வழியைக் கொண்டிருந்த பூங்காவினால் மக்களால் எளிதில் வெளியேற முடியவில்லை. பூங்காவின் சுவர்களிலும், கிணறுகளிலும் உயிரைக் காப்பாற்ற குதித்து தப்பிக்க முயன்றனர்.



இப்படுகொலையில் 379 பேர் கொல்லப்பட்டார்கள், ஆயிரத்திற்கும் அதிகமானோர் காயம்பட்டார்கள். இப்படுகொலையில் தப்பித்த எண்ணற்றவர்களில் உதம்சிங்கும் ஒருவர். இதில் ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாகவும் கருதப்படுகிறது. பிரித்தானியர்களுக்கு எதிராக தீவிரவாதத்தை ஒடுக்குவதற்காகவும், போராட்டம் நடத்தும் மக்களுக்கு பாடம் கொடுத்து எச்சரிக்கவும் இப்படுகொலைக்கு முக்கிய காரணியாக பஞ்சாபின் கவர்னராக இருந்த மைக்கேல் ஓ டயர் என்பவரே ஆவர்.

இந்நிகழ்வு உதம்சிங்கை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி தனது வாழ்வின் திருப்புமுனையாக ஏற்படுத்தியது. அதன் விளைவாக தனக்குள் அமைதியான உறுதிமொழியை மேற்கொண்டு படுகொலைகளுக்கு காரணமாய் இருந்த கவர்னரை கொலை செய்து உயிரிழந்த மக்களுக்கு சமர்ப்பிக்க சபதம் எடுத்தார்.



அந்நேரத்தில் கவர்னராக இருந்த மைக்கேல் ஓ டயர் மாற்றாலாகி விட்டிருந்தார்.

பல்வேறான பெயர்களில் பல நாடுகளுக்கு பயணித்து மைக்கேல் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க ஆரம்பித்தார். 1920 ல் ஆப்பிரிக்கா சென்றார், பின் 1921 ல் நய்ரோபி சென்றார். அமெரிக்கா சென்றும் கண்டுபிடிக்க முயற்சி செய்து தோல்வியுற்றார். விடுதலைக்கான புரட்சியில் அமெரிக்காவில் மூன்று வருடங்கள் வெளிநாடுவாழ் இந்தியர்களுடன் பணியாற்றினார். கி.பி 1927 ல் இந்தியா திரும்பினார். பின்னர் லைசென்ஸ் இல்லாத ஆயுதங்களையும், வெடிகுண்டுகளையும் வைத்திருந்த காரணத்திற்காக 1921 ல் கைதானார். இவ்விசாரணையில் 5 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 1931 ல் விடுதலை செய்யப்பட்ட உதம்சிங் பஞ்சாப் சென்று பெயிண்ட்டராக வேலை செய்து கொண்டே புரட்சிக்கான பணிகளிலும் கவனம் செலுத்தினார். அத்துடன் டயரை கொலை செய்யும் தனது முயற்சியையும் கைவிடவில்லை. 1933 ல் காஷ்மீர் சென்ற உதம்சிங் போலி வேடம் பூண்டு ஏமாற்றி ஜெர்மனிக்குச் சென்றார். 1934 ல் லண்டனை அடைந்த சிங் 9 அட்லர் ஸ்டிரீட், கமெர்சியல் ரோடு ல் வீடு எடுத்து தங்கினார். தனக்கென தனியாக கார் வாங்கி தனது பயணத்துக்கு உபயோகித்துக் கொண்டார். டயரின் இருப்பிடத்தை தெரிந்து கொண்ட மைக்கேல் நிறைய வாய்ப்புகள் கிடைத்தாலும் சரியான வாய்ப்புக்காகவும் உலகமனைத்திற்கும் கொண்டு செல்லும் வாய்ப்புக்காகவும் காத்திருந்தார்.



கடைசியாக அந்த வாய்ப்பு 21 வருடங்கள் கழித்து 1940 ஆம் வருடம் மார்ச் 13 ம் நாளில் வந்தது. கிழக்கு இந்திய சங்கமும், ராயல் செண்ட்ரல் ஆசியன் சொஸைட்டியும் இணைந்து காக்ஸ்டன் ஹாலில் நடத்திய சந்திப்பிற்கு மைக்கேல் ஓ’டயர் பேச்சாளராக வந்திருந்தார். தனது புத்தகத்தில் மறைத்து வைக்கப்பட்ட துப்பாக்கியுடன் காக்ஸ்டன் ஹாலுக்கு நுழைந்தார். சந்திப்பு முடிந்ததும் கூடியிருந்தவர்கள் எழுந்து நின்றனர், அந்நேரத்தில் மற்றொருவருடன் பேசுவதற்காக நகர்ந்த மைக்கேல் டயரை நோக்கி சிங் இரண்டு முறை சுட்டார். மைக்கேல் டயர் அந்த இடத்திலேயே இறந்தார். அத்துடன் இந்தியாவின் செய்லாளராக இருந்த லார்ட் செட்லாண்டையும், சர் லூயிஸ் டேனையும், லார்ட் லாமிங்டனையும் சுட்டார். இவர்களனைவரும் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினர். தனது பணியை முடித்த சிங் தப்பிக்க முயலவில்லை. பின் அங்கேயிருந்த காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.



இந்த வீரச்செயலைக் கேள்விப்பட்ட இந்திய பொது ஜனங்கள் உதம்சிங்கை ஒரு கதாநாயகனாக பார்த்தனர். சிங்கின் செயலுக்கு மிகுந்த மரியாதையையும், பிரித்தானிய அரசை முடிவுக்கு கொண்டுவர வேண்டுமென்ற முடிவையும் மக்கள் மனங்களில் கொண்டு வந்தது. இந்நிகழ்வு 1942 ல் மகாத்மா காந்தி நடத்திய வெள்ளையனே வெளியேறு போராட்டத்திற்கும், 1947ல் கிடைத்த சுதந்திரத்திற்கும் அடிப்படைக் காரணமாய் அமைந்திருந்தது.



இந்நிகழ்வினைக் கண்டித்த மகாத்மா காந்தி பின்வருமாறு பத்திரிகைக்கு எழுதினார்.

 
”the outrage has caused me deep pain. I regard it as an act of insanity...I hope this will not be allowed to affect political judgement"”
 

ஒரு வாரத்திற்கு பிறகு தனது பதிப்பான “ஹரிஜன்” பத்திரிக்கையில் பின்வருமாறு எழுதினார்.



"We had our differences with Michael O'Dwyer but that should not prevent us from being grieved over his assassination. We have our grievances against Lord Zetland. We must fight his reactionary policies, but there should be no malice or vindictiveness in our resistance. The accused is intoxicated with thought of bravery"



ஜவஹர்லால் நேரு தனது நேஷனல் ஹெரால்டுவில் பின்வருமாறு எழுதினார்.

 
"Assassination is regretted but it is earnestly hoped that it will not have far-reaching repercussions on political future of India. We have not been unaware of the trend of the feeling of non-violence, particularly among the younger section of Indians. Situation in India demands immediate handling to avoid further deterioration and we would warn the Government that even Gandhi's refusal to start civil disobedience instead of being God-send may lead to adoption of desperate measures by the youth of the country"



சுபாஷ் சந்திரபோஸ் மட்டுமே உதம்சிங்கின் செயலை பகிரங்கமாக வரவேற்று பேசினார்.



மக்களின் மனதில் பெரும் மகிழ்வை ஏற்படுத்திய இந்நிகழ்வுகள் மக்களை பழிக்குப் பழிவாங்கியாயிற்று என அமைதிப்படுத்தியதுடன் உதம்சிங்கை தமது கதாநாயகனாக ஏற்றுக் கொண்டார்கள். அத்துடன் உலக ஊடகங்கள் பலவும் ஜாலியன் வாலாபாக் கதையினை தெரிந்து கொண்டன. அத்துடன் டயரின் பங்கையும் தெளிவு படுத்தின. சிங்கை ஒரு விடுதலைப் போராட்ட வீரனாகவும், பயங்கரமாக படுகொலை செய்யப்பட்ட மக்களின் எதிர்விளைவாகவும் லண்டனின் டைம்ஸ் பத்திரிக்கை அங்கீகரித்தது. டயர் இலண்டனில் தான் கொலை செய்யப்பட்டார் எனபது குறிப்பிடத்தக்கது. ஜெர்மன் வானொலி ”மக்களின் அழுகுரல் துப்பாக்கி தோட்டாக்களாக பேசியது” என தொடர்ந்து ஒளிபரப்பினர்.



இதனிடையே கொலைக்கான விசாரணையில் நீதிபதிகள் கேட்ட கேள்விக்கு “நான் தான் கொலை செய்தேன், ஏனெனில் அவர் மேல் எனக்கு ஏற்பட்ட வன்மத்திற்கு பழிவாங்கினேன். மற்றும் கொலையாவதற்கு தகுதியானவர் தான்” என பகிரங்கமாக ஒத்துக் கொண்டார்.



விசாரணை முடிவில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு, 1940 ஜூலை 31ல் தூக்கிலிடப்பட்டார். மற்ற கைதிகளைப் போல சிறைக்குள்ளாக அமைக்கப்பட்டிருந்த இடமொன்றில் புதைக்கப்பட்டார். 1940 மார்ச்சில் நடந்த இப்படுகொலையைக் கண்டித்த இந்திய காங்கிரஸ் தலைவர்களில், 1962ல் ஜவஹர்லால் நேரு ”டெய்லி பிரதாப்” ல் “தூக்கு கயிற்றிற்கு முத்தம் கொடுத்த உயிர் நீத்த ஷாஹீத்-ஐ-அஸாம் உதம் சிங்கிற்கு எனது வீரவணக்கத்தைத் தெரிவிக்கிறேன்” என புகழாராம் சூட்டினார்.



இதன் பின்னர் ஜூலை 1974ல் சுல்தான் லோதியின் எம்.எல்.ஏ சாது சிங் தின்னின் பிரதமராக இருந்த இந்திரா காந்திக்கு வேண்டுகோள் விடுத்தார். அவ்வேண்டுகோளின் பேரில் இந்திரா காந்தி பிரித்தானிய அரசிடம் உதம் சிங்கின் உடலை ஒப்படைக்க கோரினார். உதம் சிங்கின் உடலைக் கொண்டு வர சாது சிங்கே இங்கிலாந்து சென்று உதம் சிங்கின் உடலைப் பெற்று வந்தார். தில்லி விமான தளத்தில் இறங்கிய சிங்கின் உடலை சங்கர் தயாள் சர்மா, பஞ்சாப் முதலமைச்சர் ஜெய்ல் சிங் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். இவர்களுடன் பிரதமராக இருந்த இந்திரா காந்தியும் சென்று மரியாதை செய்து பஞ்சாபிலுள்ள சுனம் என்னும் உதம்சிங்கின் பிறந்த ஊரில் எரிக்கப்பட்டார். அவரை எரித்தபின் அவருடைய சாம்பல் கங்கை ஆற்றில் கரைக்கப்பட்டது.

பகத்சிங்கை கேள்விப்பட்டிருப்போம், ஆனால் உதம் சிங்கை நிறைய பேர் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள்

இடம்: ஜாலியன் வாலாபாக்

காரணம்: மக்களை ஒடுக்குவதற்காக

பொறுப்பாளர்: மைக்கேல் ஓ டயர், பஞ்சாப் கவர்னர்



விளைவு : 400க்கு அதிகமானோர் பலி

1000க்கும் மேற்பட்டோர் படுகாயம்.

கற்பழிப்புகள் : இல்லை





இந்தியனாய் தனது தேசத்தில் நடைபெற்ற ஒரு படுகொலைக்கு பழிவாங்க திட்டமிட்டு 21 வருடம் காத்திருந்து கொலைகளுக்கு காரணமானவரை இந்தியன் ஒருவர் அவருடைய நாடுக்கே சென்று பழிவாங்கியிருக்கிறார். அவர் இந்தியர்களால் ஒரு தியாகியாகவும், சுதந்திர போராட்ட வீரராக மக்களாலும், தலைவர்களாலும் போற்றப்படுகிறார்.