ஒரே நாளில், 111 வழக்குகளில் தீர்ப்பு கூறி, ஆந்திர நீதிபதி ஒருவர் தேசிய அளவில் புதிய சாதனை படைத்துள்ளார். நீதிபதியின் முயற்சிக்கு வழக்கறிஞர்களும், பொதுமக்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் உள்ள கோர்ட்டுகளில் லட்சக்கணக்கான வழக்குகள் ஆண்டுக்கணக்கில் தேங்கி கிடக்கின்றன. தேங்கி கிடக்கும் வழக்குகளை விரைந்து முடிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும், நீதித்துறையில் பணியாற்றும் அனைவரது ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும். இந்த நிலையில், குண்டூர் மாவட்டம், மங்களகிரி கோர்ட்டில் ஜூனியர் நீதிபதியாக பணிபுரிந்து வரும் சத்யநாராயண மூர்த்தி (40), கடந்த 26ம் தேதி ஒரே நாளில் 111 வழக்குகளுக்கு மின்னல் வேகத்தில் தீர்ப்பு கூறி தேசிய சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் மும்பை கோர்ட் ஒரே நாளில் 80 வழக்குகளுக்கு தீர்ப்பு கூறியது இதுவரை தேசிய சாதனையாக இருந்தது. நீதிபதி சத்யநாராயணா தீர்ப்பு கூறியதில் 80 வழக்குகள், "பெட்டி கேஸ்' எனப்படும் சிறு வழக்குகளாகும். இதில் பெரும்பாலான வழக்குகள் திருட்டு, வழிப்பறி, குடும்ப தகராறு மற்றும் சாலை விபத்துக்கள் சம்பந்தப்பட்டவை. இதில் குற்றவாளிகள் பலர் குற்றத்தை ஒப்புக் கொண்டதால் மொத்தமாக 99,500 ரூபாய் அபாரதமாக விதிக்கப்பட்டது.
இது குறித்து மங்களகிரி கோர்ட் வழக்கறிஞர் சங்கத் தலைவர் சஞ்சீவரெட்டி கூறியதாவது: "நீதிபதியின் முயற்சியை நாங்கள் மனதார பாராட்டுகிறோம்; இதுபோன்று துடிப்புடன் செயல்படும் நீதிபதிகள் நீதித்துறைக்கு தேவை. கடந்த மே மாதம் மங்களகிரி கோர்ட் ஜூனியர் நீதிபதியாக சத்யநாராயணா பொறுப்பேற்ற போது, 1,900 வழக்குகள் நிலுவையில் இருந்தன. நீதிபதியின் முயற்சியால் தற்போது அது 1,300 ஆக குறைந்து விட்டது. சத்யநாராயணா போன்ற நீதிபதிகள் ஒவ்வொரு கோர்ட்டுக்கும் கிடைத்தால் வழக்குகள் நிலுவையில்லாத சூழ்நிலையை உருவாக்க முடியும்' இவ்வாறு சஞ்சீவரெட்டி கூறினார். வழக்குகள் விரைவாக முடிக்கப்படுவதால் வருமானம் பாதிக்கப்படுவதாக சில அதிருப்தி வழக்கறிஞர்கள் நீதிபதி சத்யநாராயணாவிடம் நேரில் முறையிட்டனர். மேலும், வழக்குகளில் மெதுவாக தீர்ப்பு கூறுமாறு அவர்கள் வலியுறுத்தினர். இதற்கு நீதிபதி சத்யநாராயணா, வழக்கறிஞர்களின் வருமானத்திற்காக மனுதாரர் பாதிக்கப்படுவதை நான் அனுமதிக்க மாட்டேன் என்று அன்புடன் கூறி மறுத்து விட்டார். எக்காரணம் கொண்டும் தனது நிலையை மாற்றிக் கொள்ள மாட்டேன் என அதிருப்தி வழக்கறிஞர்களிடம் கூறி விட்டார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ராஜசேகரரெட்டியின் சொந்த ஊரான கடப்பா மாவட்டம், புலிவெந்துலா கோர்ட்டில் இதற்கு முன் பணியாற்றிய நீதிபதி சத்யநாராயணா, 20 நாட்களில் 808 சிவில் வழக்குகளுக்கு தீர்ப்பு கூறி சாதனை படைத்தவர். இந்த சாதனையை அப்போதைய முதல்வர் ராஜசேகரரெட்டி வெகுவாக பாராட்டியுள்ளார். "சத்யநாராயணா போன்ற நீதிபதிகளின் செயல்கள் நீதித்துறையின் மீது மக்களுக்கு மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்தி, கோர்ட்டுகள் மீதான அச்சத்தை போக்கியுள்ளது' என்று ராஜசேகர ரெட்டி கூறியுள்ளார். கோர்ட்டில் அதிரடியை காட்டும் நீதிபதி சத்யநாராயணா ஊடகங்களுக்கு பேட்டி அளிப்பதை தவிர்த்து வருகிறார். ""நான் சாதனை புரிவதற்காக இவற்றை செய்யவில்லை. மனநிறைவுக்காக செய்கிறேன். எனக்கு விளம்பரம் தேவையில்லை,'' என, நீதிபதி சத்யநாராயணா கூறியுள்ளார். நீதிபதி சத்யநாராயணாவின் அதிரடி தீர்ப்புகளால் அந்த கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த மனுதாரர்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டுள்ளனர். மேலும் அவரது செயலுக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளனர்-