சிக்கிம் இமய மலைத்தொடரில் அமைந்த இந்திய மாநிலமாகும். 1975ஆம் வருடம் இது இந்தியாவுடன் சேர்க்கப் பட்டது. அதுவரை ஒரு தனி நாடாக விளங்கியது. சிக்கிமின் தலைநகர் கேங்டாக். நேபாள மொழி அதிகாரப்பூர்வ மொழி. இந்து மதமும், வஜ்ராயன புத்த மதமும் இம்மாநில மக்களால் கடைபிடிக்கப் பட்டு வருகிறது. இந்திய மாநிலங்களிலேயே கோவா மாநிலம் மட்டும் தான் சிக்கிமை விட சிறிய மாநிலம். சிக்கிமின் மேற்கில் நேபாளமும், வடக்கில் சீனாவும், கிழக்கில் பூட்டானும், கிழக்கில மேற்கு வங்களாமும் உள்ளன. உலகின் மூன்றாவது உயர்ந்த சிகரமான கஞ்செஞ்சுங்கா சிக்கிமில் உள்ளது.
இந்தியாவுடன் இணைந்தது எப்படி?
1947-ல் இந்தியா சுதந்திரம் அடைந்த போது, சிக்கிம் இந்தியாவுடன் இணைய மறுத்துவிட்டது. பாரதப் பிரதமர் ஜவஹர்லால் நேரு, சிக்கிமிற்கு சிறப்பு அந்தஸ்து (SPECIAL PROTECTORATE STATUS) கொடுத்து இந்தியாவின் துணை மாநிலமாக இருக்க ஒப்புக் கொண்டார். அதன்படி சிக்கிமின் பாதுகாப்பு, வெளியுறவு, தகவல் தொடர்பு போன்றவை இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்தன; மற்ற எல்லா விஷயங்களிலும் சுயாட்சி அந்தஸ்து பெற்றிருந்தது. நேப்பாளிகளின் ஊடுருவல் அதிகமாகத் தொடங்கவே, 1975-ல் சிக்கிமின் பிரதமராகப் பொறுப்பேற்ற காஜி என்பவர் சிக்கிமை இந்தியாவின் ஒரு மாநிலமாகவே இணைத்துக் கொள்ள இந்திய அரசாங்கத்துக்கு வேண்டுகோள் விடுத்தார். அதன்படி எடுக்கப்பட்ட பொது வாக்கெடுப்பில் 97.5% சிக்கிம் மக்கள் இந்தியாவுடன் இணைவதை ஆதரிக்க, 16.05.1975-ல் சிக்கிம் இந்தியாவின் 22-ஆவது மாநிலமாக இணைந்தது.
வித்தியாசமான மாநிலம்
சிக்கிம், 7096 சதுர கிலோமீட்டர் பரப்பளவு மட்டுமே கொண்ட சிறிய மாநிலம். தெற்கு வடக்காக 115 கிலோமீட்டரும், கிழக்கு மேற்காக 65 கிலோமீட்டரும் விஸ்தீரணம் கொண்டுள்ளது. நான்கே மாவட்டங்கள். கிழக்கு சிக்கிம்(தலைநகரம் காங்டாக்), மேற்கு சிக்கிம்(தலைநகரம் கைஷிங்), வடக்கு சிக்கிம்(தலைநகரம் மங்கன்), தெற்கு சிக்கிம்(தலைநகரம் நாம்ச்சி) என்பவை தான் மாவட்டங்களின் பெயர்கள். சிக்கிம் மாநிலத்தின் தலைநகரம் காங்டாக்.
இந்தியாவின் வடகிழக்குப் பிராந்தியத்தில் எவ்வளவோ அரசியல் குழப்பங்கள், தீவிரவாத துர்நிகழ்வுகள், போதைப் பொருள் புழக்கங்கள், சமூக பொருளாதாரக் கோணங்களில் பின்தங்கிய நிலை என்று இருந்தாலும் இயற்கை அன்னையின் பூரண அரவணைப்பு இருக்கிறது. வடகிழக்கின் ஏழு மாநிலங்களில் அடிதடிப் பிரச்னை, அரசியல் குழப்பம், தீவிரவாத நடவடிக்கைகள் என்று ஏதும் ஒரு சிறிதும் இல்லாத அமைதியான ஒரே மாநிலம் சிக்கிம்.
அரசியல் என்று பார்த்தால் சிக்கிம் டெமாக்ரடிக் ஃப்ரண்ட் என்கிற ஒரே கட்சி தான் பிரதானம். பெயருக்கு எதிர்க்கட்சியாக காங்கிரஸ். 2009 மே மாதம் பாராளுமன்றத்துடன் சேர்ந்து நடந்த மாநில சட்டசபைத் தேர்தலில் மொத்தமுள்ள 23 தொகுதிகளில் 23-ஐயும் வென்று பாராளுமன்றத் தொகுதியையும் கைப்பற்றி இருக்கிறது சிக்கிம் டெமாக்ரடிக் ஃப்ரண்ட்.
சுற்றுச்சூழல் பராமரிப்பிலும், பொதுசுகாதாரம் மற்றும் சுத்தம் ஆகியவற்றிற்கு மிகவும் முக்கியத்துவம் தந்து நிர்வகிக்கப்படும் பகுதியாகத் திகழ்கிறது இந்தச் சிறிய மாநிலம். ஒட்டுமொத்த சிக்கிமிலும் பிளாஸ்டிக் பைகளுக்குத் தடை உள்ளது. கடைகளில் துணிப்பையில் தான் பொருட்கள் தருகிறார்கள். பயண வழியெங்கும், குறிப்பாக மலைப்பகுதிகளில் அவ்வளவு பயணிகள் வந்து செல்லும் இடத்திலும் பிளாஸ்டிக் குப்பைகள் கண்களில் படுவதில்லை.
ஏழெட்டு மாதங்கள் சுற்றுலாப் பயணிகளின் வரவு நிறைய பணப்புழக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது. டாக்சி வாடகையாகட்டும், அறைகளின் வாடகையாகட்டும், உணவுப் பொருட்களின் விலையாகட்டும் எல்லாமே மாநிலம் இருக்கும் உயரத்துக்குப் பொருத்தமாகவே. மூவாயிரம் அடியிலிருந்து 28208 அடி உயரம் (உலகின் மூன்றாவது உயரமான சிகரம் கஞ்ஜன் ஜங்கா இந்த மாநிலத்தின் தான் உள்ளது) வரை மாநிலத்தின் உயரம் வேறுபடுகிறது.
மொத்த மாநிலத்திலும் எங்கும் தொடர்ந்து ஐநூறடி தூரம் ஏற்ற இறக்கம் இல்லாமல் இல்லை. அதனாலேயே ஆண்களுக்கும் பெண்களுக்கும் குறிப்பாகப் போலீஸ்காரர்களுக்கும் தொப்பை என்பது அரிதாகவே உள்ளது.
இணைப்பு:
மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த பக்தோக்ரா என்கிற விமான நிலையம் 114 கிலோமீட்டர் தூரத்திலும், NJP என்று சொல்லப்படும் நியூ ஜய்பால்குரி (இதுவும் மேற்கு வங்காளமே) என்கிற ஊரின் புகைவண்டி நிலையம் 125 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளன. சாலைமார்க்கமாக டார்ஜிலிங் 94 கிலோமீட்டர் தொலைவிலும், சிலிகுரி என்கிற ஊர் 114 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளன. சிக்கிமில் புகைவண்டித் தடமோ, விமான நிலையமோ கிடையாது.