1829ல் பாரம்பரியமிக்க அபாச்சே இனத்தில் பிறந்த ஜிரோநிமாவின் இயற்பெயர் கோயல்த்லே. செவ்விந்தியர்களின் பெயர்களை உச்சரிக்க சிரமப்பட்ட வெள்ளையர்கள் அவர்களுக்கு தங்கள் வாயில் நுழையும் பெயர் வைத்து அழைப்பது வழக்கம். அவ்வழக்கத்தின் படியே கோய்ல்தே ஜிரொநிமா ஆனார். எல்லா செவ்விந்தியர்களைப் போலவும் வேட்டை, மேய்ச்சல் போன்றவற்றில் கைதேர்ந்த ஜிரோநிமா செவ்விந்திய மருத்துவத்தையும் கற்று திருமணம் முடிந்து மூன்று பிள்ளைகளை பெற்று வாழ்ந்து வந்தார்.
1851ல் தன் முகாமை விட்டு சகாக்களோடு ஜிரோநிமா வேட்டைக்கு சென்றிருந்தார். அப்போது சுமார் நானூறு வீரர்களோடு வந்த ஸ்பானியப் படை அம்முகாமை தீக்கிரையாக்கி அங்கிருந்த பெண்கள், குழந்தைகள் ஆகியோரை ஈவிரக்கமின்றி கொலை செய்தது. அச்சம்பவத்தில் தன் மனைவியையும், மூன்று குழந்தைகளையும் இழந்த ஜிரோநிமா வெள்ளையர்களை வேரறுக்க உறுதி பூண்டார்.
பதினாறு தேர்ந்த வீரர்களை மட்டுமே தன் கைவசம் வைத்திருந்தவர் 1858ஆம் ஆண்டிலிருந்து மெக்ஸிகோ இராணுவ வீரர்கள் மீதும், மெக்ஸிக்கோ குடியிருப்புகள் மீதும் அதிரடி தாக்குதல் நடத்தத் தொடங்கினார். பெரும் படைப்பிரிவுகளை கூட கொரில்லா முறையில் அனாயசமாக திடீர் தாக்குதல் நடத்தி வெற்றி கொண்டார். மெக்ஸிகோவில் ஜிரோநிமாவின் புகழ் பெருகுவதை கண்ட அமெரிக்க அரசாங்கம் மெக்ஸிகோவுக்கு உதவியாக தன்னுடைய படைப்பிரிவுகளை (நம்ம அமைதிப்படை ரேஞ்சில்) அனுப்பி வைத்தது. அவற்றையும் தொடர்ந்து ஜிரோநிமா சுளுக்கெடுத்து வந்தார்.
அமெரிக்க அரசாங்கத்தை 28 ஆண்டுகள் ஆட்டிபடைத்தர் . கடைசியாக உதைவாங்கியே அலுத்துப் போன அமெரிக்க அரசாங்கம் 1886ஆம் ஆண்டு ஐயாயிரம் பேர் கொண்ட பெரிய படை ஒன்றினை ஜிரோநிமாவை கைது செய்ய அனுப்பி வைத்தது.
ஐயாயிரம் பேரும் முற்றுகையிட்டபோதும் ஜிரோநிமாவை அவ்வளவு சுலபமாக நெருங்கமுடியவில்லை. கடைசியாக பொதுமன்னிப்பு உள்ளிட்ட சில நிபந்தனைகளோடு ஜிரோநிமா சரணடைய முன்வந்தார். ஜிரோநிமா சரணடையும் போது அவரது பெரும்படையும் சரணடைய வேண்டும் என்று அமெரிக்க அரசு கேட்டுக் கொண்டது. ஜிரோநிமாவுடன் சரணடைந்த பெரும்படையில் இருந்தவர்கள் மொத்தமே (குழந்தைகள், பெண்கள் உட்பட) முப்பத்தெட்டு பேர் தான்.
அதன் பின்னர் 23 ஆண்டுகள் அமைதியாக உயிர்வாழ்ந்த ஜிரோநிமா 1909ல் தன்னுடைய எழுபத்தி ஒன்பதாவது வயதில் மரணமடைந்தார். தன் கலாச்சாரத்தையும், பழக்கவழக்கங்களையும் என்றுமே விட்டுக் கொடுக்காத ஜிரோநிமா கடைசிக் காலத்தில் கிறிஸ்தவ மதத்துக்கு மாறியது தான் ஆச்சரியம். பின்னர் ஜிரோநிமாவை கதாநாயகனாகவும், வில்லனாகவும் சித்தரித்து ஏராளமான திரைப்படங்களும், தொலைக்காட்சித் தொடர்களும் அமெரிக்காவில் உருவாக்கப்பட்டது.
இன்றைக்கும் செவ்விந்தியர்கள் அமெரிக்க கிராமங்களில் சிறுபான்மையினராக வசிக்கிறார்கள், தங்கள் வேர்களையும், கலாச்சாரத்தையும் இழந்துவிட்டு..