ஜப்பானியத் தமிழியல் ஆய்வு
- முதன்மைக் கட்டுரை: ஜப்பானியத் தமிழியல்
தமிழ் படிக்கத் தமிழ்நாட்டுக்கு வந்த சுசுமு ஓனோ சென்னைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்த முனைவர் பொற்கோ அவர்களிடம் முறையாகத் தமிழ் கற்றார். பின்னர் இரண்டு பேராசிரியர்களும் இணைந்து பல்வேறு ஆய்வுகளைச் செய்தனர்.
1970களின் பிற்பகுதியில் இவர் தமிழ் மொழிக்கும் ஜப்பானிய மொழிக்கும் இடையேயான தொடர்புகள் குறித்த தனது கருதுகோள்களை வெளியிட்டார். இக்கருத்துகள் ஆரம்பத்தில் 1970 இல் "சுசுமு ஷீபா" என்பவராலும் பின்னர் "அகீரா ஃபூஜிவாரா" (1981) என்பவராலும் முன்வைக்கப்பட்டிருந்தன[1]. ஓனோவின் ஆய்வுகள் ஒலி, சொற்கள், இலக்கணம், மற்றும் இலக்கியம் ஆகியவற்றில் மட்டுமல்லாமல், தொல்பொருள் ஆய்வு, நாட்டுப்பாடல்கள் போன்றவற்றிலும் ஆய்வுகளை மேற்கொண்டார்[2]. இவர்களது ஆய்வுகள் பல ஜப்பானிய மொழியியல் ஆய்வாளர்களிடையே வாதப் பிரதிவாதங்களைக் கிளப்பின[3].
ஓனோவின் பணியைப்பற்றி கமில் சுவலபில் என்பவர் பின்வருமாறு குறிப்பிட்டார்: ஜப்பான் மற்றும் திராவிட மொழிகளின் ஒற்றுமையைத் தற்செயலானது என எளிதில் ஒதுக்கிவிட முடியாது. மற்றும் இது ஆழமான மரபு வழி ஒற்றுமையை நமக்குப் புலப்படுத்துகிறது. ஓனோவின் இந்த ஆராய்ச்சி ஒற்றுமையை மெய்ப்பிக்க முயற்சி செய்யும்[4].
சுசுமு ஓனோ தமிழ் அமைப்புகள், மற்றும் தமிழாய்வாளர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். பல ஜப்பானிய மாணவர்கள் தமிழ் கற்க ஊக்கப்படுத்தினார். இலங்கையைச் சேர்ந்த தமிழாய்வாளர்கள் பேராசிரியர்கள் ஆ. சண்முகதாஸ், மனோன்மணி சண்முகதாஸ் போன்றவர்கள் ஓனோவுடன் இணைந்து பல ஆய்வுகளை மேற்கொண்டு பல ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளனர்.