மற்ற திராவிட மொழிகளைப் போல, ஆனால் மற்ற பிற இந்திய மொழிகளைப் போல் அல்லாது, தமிழ் மொழி சமஸ்கிருதத்திலிருந்து தோன்றவில்லை. திராவிட மொழிகளில் மிக நீண்ட இலக்கிய மரபைக் கொண்டது தமிழ். தமிழ் இலக்கியங்களில் சில பல்லாயிரம் ஆண்டுகள் பழமையானவை என்று கூறப்படுகின்றன. இருந்தும், கண்டெடுக்கப்பட்டுள்ள தமிழ் ஆக்கங்கள் கி.மு. 300ம் ஆண்டைச் சேர்ந்த பிராமி எழுத்துக்களில் எழுதப்பெற்றவைகளாகும். பனையோலைகளில் எழுதப்பட்டு (திரும்பத் திரும்பப் பிரதிபண்ணுவது மூலம்) அல்லது வாய்மொழி மூலம் கடத்தப்பட்டுப் பாதுகாக்கப்பட்டுவந்ததால், மிகப் பழைய ஆக்கங்களின் காலங்களைக்கூடக் கணிப்பது மிகவும் கடினமாக உள்ளது. எனினும் மொழியியல் உட் சான்றுகள், மிகப் பழைய ஆக்கங்கள் கிமு 2 ஆம் நூற்றாண்டுக்கும், கிபி 3 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இயற்றப்பட்டிருக்கலாம் எனக் காட்டுகின்றன. இன்று கிடைக்கக்கூடிய மிகப்பழைய ஆக்கம் தொல்காப்பியம் ஆகும். இது பண்டைக்காலத் தமிழின் இலக்கணத்தை விளக்கும் ஒரு நூலாகும். இதன் சில பகுதிகள் கிமு 200 அளவில் எழுதப்பட்டதாகக் கருதப்படுகின்றது. 2005ல் அகழ்ந்தெடுக்கப்பட்ட சான்றுகள், தமிழ் எழுத்து மொழியை கிமு 500 அளவுக்கு முன் தள்ளியுள்ளன. பண்டைத் தமிழில் எழுதப்பட்ட குறிப்பிடத்தக்க காப்பியம், கிபி 200 - 300 காலப்பகுதியைச் சேர்ந்த சிலப்பதிகாரம் ஆகும்.
மொழியியலாளர் தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ் மொழியை மூன்று காலப்பகுதிகளாக வகைப்படுத்தியுள்ளனர். இவை, பண்டைக்காலம் (கிமு 200 தொடக்கம் கிபி 700 வரை), மத்திய காலம் (கிபி 700 தொடக்கம் கிபி 1500 வரை), நவீன காலம் (கிபி 1500 தொடக்கம் இன்று வரை) என்பனவாகும். மத்திய காலத்தில் பெருமளவு வடமொழிச் சொற்கள் தமிழில் கலந்துவிட்டன. பிற்காலத்தில் பரிதிமால் கலைஞர், மறைமலை அடிகள் முதலான தூய்மை வாதிகள் இவை தமிழிலிருந்து நீக்கப்பட உழைத்தனர். இவ்வியக்கம், தனித்தமிழ் இயக்கம் என அழைக்கப்பட்டது. இதன் விளைவாக முறையான ஆவணங்களிலும், மேடைப் பேச்சுகளிலும், அறிவியல் எழுத்துக்களிலும் சமஸ்கிருதக் கலப்பில்லாத தமிழ் பயன்பட வழியேற்பட்டது. கிபி 800 க்கும் 1000 இடைப்பட காலப்பகுதியில், மலையாளம் ஒரு தனி மொழியாக உருவானதாக நம்பப்படுகின்றது.
மொழிக்குடும்பம்
தமிழ், தமிழ் மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மொழியாகும். இக் குடும்பத்தில், இருளா, Kaikadi, பேட்டா குறும்பா, Sholaga மற்றும் Yerukula என்னும் மொழிகள் அடங்கும். தமிழ் மொழிக் குடும்பம், தமிழ்-மலையாளம் மொழிகளின் ஒரு துணைக் குடும்பமாகும். தமிழ்-மலையாளம் மொழிகள், தமிழ்-குடகு மொழிக் குடும்பத்தின் துணைப் பிரிவாகவும், தமிழ்-குடகு மொழிக் குடும்பம், தமிழ்-கன்னடம் மொழிக் குடும்பத்தின் துணைப் பிரிவாகவும் உள்ளன. தமிழ்-கன்னடம் மொழிக் குடும்பம், திராவிட மொழிக் குடும்பத்தின் துணைப் பிரிவுகளுள் ஒன்றான தென் திராவிட மொழிக் குடும்பத்தின் உட் பிரிவுகளுள் ஒன்றாகும்.
தமிழ் நாட்டை எல்லையாகக் கொண்டுள்ள, கேரள மாநில மக்களால் பேசப்படும் மலையாளம், சொற்கள், வசன அமைப்பு ஆகிய அம்சங்களில் தமிழை நெருக்கமாக ஒத்துள்ள ஒரு மொழியாகும்.
தமிழ் பேசப்படும் இடங்கள்
தமிழ், தென் இந்திய மாநிலமான தமிழ் நாட்டின் பெரும்பான்மையினரதும், இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் வாழும் மக்களதும் முதன் மொழியாகும். தமிழ் மேற்படி நாடுகளின் பிற பகுதிகளிலும், குறிப்பாக, இந்திய மாநிலங்களான கர்நாடகம், கேரளம் மற்றும் மகாராஷ்டிரத்திலும், இலங்கையில், கொழும்பு மற்றும் மத்திய மலை நாட்டுப் பகுதிகளிலும் வழங்கி வருகின்றது.
தமிழ் மக்கள், 19 ஆம் நூற்றாண்டிலும், 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும், ஒப்பந்தக் கூலிகளாகவும், கீழ்நிலை அரசப் பணியாளர்களாகவும், இந்தியா, இலங்கை போன்ற நாடுகளிலிருந்து பிரித்தானியப் பேரரசின் பல பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டனர். அவ்வாறு அவர்கள் சென்ற இடங்களில் தமிழ் பேசும் சமுதாயங்கள் உருவாகின. இவர்களின் வழிவந்தவர்கள் இன்று சிங்கப்பூர், மலேசியா, மொரீஷியஸ் போன்ற நாடுகளில் குறிப்பிடத்தக்க குடித்தொகை கொண்டவர்களாக வாழ்ந்து வருகின்றார்கள். தென்னாபிரிக்கா, குயானா, பிஜி, சுரினாம் மற்றும் ட்ரினிடாட் டொபாகோ போன்ற நாடுகளிலும் பலர் பூர்வீகத் தமிழராக இருந்தும், அந் நாடுகளில் தமிழ் மொழியை அவர்கள் பேசுவதில்லை.
மிக அண்மைக்காலங்களில், பெரும்பாலும் இலங்கையின் இன முரண்பாடுகள் காரணமாக அகதிகளாக அங்கிருந்து இடம் பெயர்ந்தவர்களும், ஓரளவு பொருளாதாரக் காரணங்களுக்காக இடம் பெயர்ந்தவர்களுமாக, பல தமிழர்கள் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா, ஐக்கிய அமெரிக்கா மற்றும் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளிலும் வாழ்ந்து வருகின்றார்கள். தற்போது இவர்களில் பழைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் தமிழ் மொழியை ஒரு உயிர்ப்புள்ள மொழியாக வழங்கி வந்த போதிலும், இளைய தலைமுறையினர் பலர் தமிழ் மொழியைப் பயன்படுத்த இயலாதவர்களாகவும், ஆர்வமற்றவர்களாகவும் வளர்ந்து வருவதை கவனிக்க முடிகின்றது. புலம் பெயர்ந்த தமிழர்களின் பெரு முயற்சியினால் தற்போது ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் தமிழ்மொழி இரண்டாம் மொழியாக பாடசாலைகளில் கற்பிக்கப்படுகின்றது.
ஆட்சி மொழி அங்கீகாரம்
தமிழ், இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் ஆட்சி மொழியாக உள்ளதுடன், இந்திய அரசியலமைப்பின் கீழ் தேசிய மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ள 22 மொழிகளுள் ஒன்றாகவும் உள்ளது. இலங்கையிலும் தமிழ் மூன்று ஆட்சி மொழிகளுள் ஒன்றாக அங்கீகாரம் பெற்றுள்ளது. சிங்கப்பூர் நாட்டிலும் தேசிய மொழிகளுள் ஒன்றாகத் தமிழ் இடம் பெற்றுள்ளதுடன், தென்னாபிரிக்காவிலும் தமிழுக்கு அரசியலமைப்பு அங்கீகாரம் உள்ளது.
அத்துடன், இந்தியாவிலும் வெளி நாடுகளிலும் உள்ள பல தமிழ் அமைப்புக்களினதும், அறிஞர்களினதும் குறிப்பாக, பர்க்லேயிலுள்ள கலிபோர்னியாப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த் துறைத் தலைவரான ஜார்ஜ் எல் ஹார்ட் போன்றவர்களுடையதும் முயற்சிகளைத் தொடர்ந்து, 2004 ஆம் ஆண்டில், இந்திய அரசினால் தமிழ் ஒரு செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அங்கீகாரம் பெற்றுள்ள முதல் இந்திய மொழி தமிழாகும். இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளினதும் கூட்டுக் கூட்டமொன்றின்போது, 2004 ஜூன் 6 ஆம் நாள் இந்திய குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் அவர்களால், இவ்வறிவிப்பு வெளியிடப்பட்டது.
பேச்சுத்தமிழ் - உரைநடைத்தமிழ் வேறுபாடுகள்
தமிழ், அதன் பல் வேறுபட்ட வட்டார வழக்குகளுக்கு மேலாக, இலக்கியங்களில் பயன்படும் முறையான செந்தமிழுக்கும், கொடுந்தமிழ் என வழங்கப்படும் பேச்சுத் தமிழுக்கும் இடையே தெளிவான இருவடிவத் தன்மை (diglossia) காணப்படுகின்றது. இங்கே கொடுந்தமிழ் என்பது அனைத்து வட்டாரப் பேச்சுத் தமிழ் வழக்குகளையும் பொதுவாகக் குறிக்கும் ஒரு சொற் பயன்பாடு ஆகும். இந்த இருவடிவத் தன்மை பண்டைக் காலம் முதலே தமிழில் இருந்து வருவதை, கோயில் கல்வெட்டுக்களிற் காணப்படும் தமிழ், சமகால இலக்கியத் தமிழினின்றும் குறிப்பிடத் தக்க அளவு வேறுபட்டுக் காணப்படுவதினின்றும் அறிந்துகொள்ள முடியும். இவ்வாறு, செந்தமிழ் எந்த வட்டார மொழி வழக்கையும் சாராது இருப்பதனால், எழுத்துத் தமிழ், தமிழ் வழங்கும் பல்வேறு பகுதிகளிலும், ஒன்றாகவே இருப்பதைக் காணலாம்.
தற்காலத்தில், எழுதுவதற்கும், மேடைப் பேச்சுக்கும் செந்தமிழே பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றது. எடுத்துக்காட்டாக, செந்தமிழ், பாட நூல்களுக்குரிய மொழியாகவும், பெருமளவுக்கு இலக்கிய மொழியாகவும், மேடைப் பேச்சுகளுக்கும், விவாதங்களுக்கும் உரிய மொழியாகவும் விளங்கிவருகிறது. அண்மைக் காலங்களில், மரபு வழியில், செந்தமிழுக்குரிய துறைகளாக இருந்து வந்த பகுதிகளிலும் கொடுந்தமிழ்ப் பயன்பாடு அதிகரித்து வருவதைக் காணமுடிகின்றது. பெரும்பாலான தற்காலத் திரைப்படங்கள், மேடை நாடகம் மற்றும் தொலைக் காட்சி, வானொலி முதலியவற்றில் இடம்பெறும் மக்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள் பலவற்றிலும் கொடுந்தமிழ் பயன்படுத்தப்படுவதைக் காணலாம். பல அரசியல் வாதிகளும், மக்களுக்கு நெருக்கமாகத் தங்களைக் காட்டிக் கொள்ளும் நோக்கில் தங்கள் மேடைப் பேச்சுக்களிலும் கொடுந்தமிழைப் பயன்படுத்தி வருகின்றனர்.
செந்தமிழுக்கான இலக்கண விதிகள் இறைவனால் உருவாக்கப் பட்டதாக நம்பப்படுவதால், செந்தமிழே சரியான மொழியாகக் கருதப்பட்டது. இதனால், பேச்சுத் தமிழ் வழக்குகளுக்குச் சிறப்புக் கிடைக்கவில்லை. பல ஐரோப்பிய மொழிகளில் காணப்படுவதற்கு மாறாக, தமிழில், அதன் வரலாற்றின் பெரும் பகுதியிலும், ஒரு பொதுவான பேச்சுமொழி இருந்ததில்லை. தற்காலத்தில் அதிகரித்த கொடுந்தமிழ்ப் பயன்பாடு, அதிகாரபூர்வமற்ற முறையில் பொதுப் பேச்சுத் தமிழ் வழக்குகள் தோன்றுவதற்குக் காரணமாகவுள்ளது. இந்தியாவில் பொதுக் கொடுந்தமிழ், 'படித்த, பிராமணரல்லாதவர்'களின் பேச்சுவழக்கை அடிப்படையாகக் கொண்டுள்ளது. எனினும் குறிப்பிடத் தக்க அளவுக்கு, தஞ்சாவூர் மற்றும் மதுரைப் பேச்சு வழக்குகளில் செல்வாக்கு உள்ளது. இலங்கையில், அதிக மக்கள் தொகையைக் கொண்ட யாழ்ப்பாணப் பேச்சு வழக்கையே பெரும்பாலான வெளியார் இலங்கைத் தமிழ்ப் பேச்சு வழக்காக இனங்கண்டு கொள்கின்றனர். ஆனல் மட்டக்களப்பு பேச்சு வழக்கு யாழ்ப்பாண பேச்சு வழக்கிலும் பெரிதும் வேறுபட்டது.
எழுத்து முறை
தமிழ் எழுத்துமுறை ஒலிப்பியல் அடிப்படையிலானது குறுக்கம், அளபெடை, மற்றும் புணர்ச்சி நெறிகளுக்கு உட்பட்டே எழுத்துக்கள் ஒலிக்கப்படுகின்றன. தற்போதைய அரிச்சுவடி அசோக மன்னர் காலத்துப் பிராமி அரிச்சுவடியிலிருந்து வளர்ந்தது. பிராமியின் தென்கிளையிலிருந்து கிரந்த அரிச்சுவடி உருவானது. அக்காலத்தில் தமிழும், சமஸ்கிருதமும் கிரந்த எழுத்துக்களைக் கொண்டே எழுதப்பெற்றன.
எழுத்து முறை வளர்ந்து கொண்டிருக்கையில் சமஸ்கிருதத்திலிருந்து பல சொற்கள் தமிழில் பயன்படுத்தப்படலாயின. அவற்றை எழுதும் பொருட்டுச் சில கிரந்த எழுத்துக்களைப் பயன்படுத்தினர். இவ்வெழுத்துக்களைப் பயன்படுத்துவதற்கு மாறாகத் தொல்காப்பியம் கூறியபடி அச்சொற்களைத் தமிழ்படுத்த வேண்டும் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.
ஆறாம் நூற்றாண்டிலிருந்து பத்தாம் நூற்றாண்டு வரையிலான காலத்தில் "வெட்டெழுத்து" முறை உருவானது. இது ஓலைச்சுவடிகளிலும், கல்லிலும் செதுக்குவதற்கேற்ப இருந்தது. இவ்வெழுத்துக்களை "வட்டெழுத்து" என்றும் வழங்குவர்.
எழுத்துச்சீர்திருத்தம்
வீரமாமுனிவரின் அறிவுரைப்படி இரட்டைக் கொம்பு போன்ற மாற்றங்கள் தமிழ் எழுத்துக்களில் செய்யப்பட்டன. 1975-ல் எம். ஜி. இராமச்சந்திரன் ஆட்சியில் அச்சில் ஏற்றுவதை எளிமைப்படுத்தும் வகையில் பெரியாரால் பரிந்துரைக்கப்பட்ட சில மாற்றங்கள் ஏற்கப்பட்டன. எதிர்காலத்தில் உகரம், ஊகாரம் ஏறிய மெய்யெழுத்துக்களில் மாற்றங்கள் வரக்கூடும். உதாரணம்: ஜ- ஜு – ஜூ, ஸ-ஸு-ஸூ போன்று க – கு- க ூ , ச-சு -சூ என்று உகரத்திற்கும் ஊகாரத்திற்கும் பொதுவான modifier வரக்கூடும் என்று எதிர் பார்க்கலாம்.