தன்னம்பிக்கை இருந்தால், வாழ்க்கையில் இழப்பு என்பதே இல்லை என்று நிரூபித்துக் காட்டியவர் ஹெலன் கெல்லர்.
'வாழ்க்கை என்பது ஒரு விசித்திர விளையாட்டு. அது முடியும்வரை நான் களைக்கமாட்டேன். தைரியமே எந்தத் துன்பத்துக்கும் மருந்து' என்று அவர் நம்பி, தன் குறைபாடுகளிலிருந்து மீள, விதியோடு போராடி வெற்றி பெற்றார். ஊனமுற்றவர்க்கு மட்டுமின்றி, ஐம்புலன்களும் குறைவறப் பெற்றவர்க்கும் அவரது தன்னம்பிக்கை மிகுந்த வாழ்க்கை, வழிகாட்டும் தீபமாகத் திகழ்கிறது.
ஹெலன் கெல்லர் பிறந்தபோது எவ்வித ஊனமும் இல்லாமல்தான் பிறந்தார். இரண்டாண்டுகள் வரை எந்தக் குறையுமில்லாமலே வளர்ந்தார். பிறகு வந்த காய்ச்சல் நோய், தான் போகும்போது அவரிடமிருந்து மூன்று இன்றியமையாத சக்திகளைக் கூடவே கொண்டு சென்றுவிட்டது. பார்க்கிற, கேட்கிற, பேசுகிற சக்திகளில் ஒன்றை இழந்தாலும் மனமுடைந்து விதியை நொந்து மூலையில் முடங்கிப் போவோரே அதிகம். ஆனால் ஹெலன் கெல்லர் மூன்றையுமே இழந்த - பார்வையற்ற, செவிப்புலனற்ற, வாய்பேசாத நபர் என்றாலும், தன் அறிவுக் கூர்மையால், மனோதிடத்தால், அயராத உழைப்பால், ஆழ்ந்த சிந்தனையால் அனைத்துலகும் போற்றும் அற்புதப் பெண்மணியாய் உயர்ந்தார்.
இன்றியமையாத புலன்கள் செயலிழந்தபோது ஹெலன் அழுது ஆர்ப்பரிக்கவில்லை. பிறர் பச்சாதாபப்படுவதைக் கூட விரும்பவில்லை. ஏன், தானேகூட தன் மீது பரிதாபப்பட்டுக் கொள்ளவில்லை. மாறாக, இத்தனை பெரிய குறைகள் அவருக்கு ஒரு பொருட்டாகவேத் தோன்றவில்லை. மனமும் செயலற்றுப் போயிருந்தால்தான் அவரால் ஏதும் செய்திருக்க முடியாது.
எல்லோரையும் போல கல்லூரியில் படித்து, தனக்கென்று தனிச்சலுவை எதையும் கோராமல், கால நீட்டிப்பு கிடைத்தபோதும் அதை நிராகரித்து குறிப்பிட்ட ஆண்டுகளில் அமோகமாக வெற்றி பெற்று, குறையேதுமற்ற பிற மாணவர்களைவிடச் சிறப்பாகத் தேர்வு பெற்றார். அரிய சாதனைகள் நிகழ்த்தி, அரிய வழிகாட்டும் நூல்கள் பல எழுதி, எண்பத்தெட்டு வயது வரை ஆரோக்கியமாய் வாழ்ந்து உலகின் எட்டாவது அதிசயம் என்று பாராட்டப் பெற்றார்.
களிமண் போல இயக்கமற்று இருந்த அவருள் உணர்வைப் பெய்து, ஊக்கம் தந்து உன்னத நிலைக்கு உயர இயக்கியவர் மிஸ் ஸல்லிவன் என்ற ஆசிரியை. அவரே பாதி பார்வையில்லாதவர். நலிந்து மெலிந்த ஆரோக்கியமற்ற உடலுடையவர். இருந்தும் இந்தக் காது கேளாத, வாய் பேசாத, கண் தெரியாத துர்ப்பாக்கியக் குழந்தையைக் கரையேற்ற வேண்டும் என்பதை வாழ்வின் லட்சியமாக ஆக்கிக் கொண்டவர். இந்த லட்சியத்திற்கேற்ப, ஐம்பதாண்டுகள் அவர் ஹெலனை விட்டுப் பிரியாமல், நிழல்போலத் தொடர்ந்தார். அவருக்கு அன்னையாய், தோழியாய், நல்லாசானாய், வழிகாட்டும் தீபமாய், தடம் காட்டும் கைக் கோலாய்த் திகழ்ந்தார். வெறும் வயிற்றுப் பிழைப்புக்காக அவர் அதைச் செய்யவில்லை. அவர் மட்டும் ஹெலனுக்கு ஆசிரியையாகக் கிடைக்காதிருந்திருந்தால் ஹெலன் என்ற அற்புத சாதனையாளரை உலகம் அறிந்திருக்க முடியாது போயிருக்கும்.
அவர் ஹெலனுக்குக் கற்பித்த விதம் யாராலும் நினைத்துக் கூடப் பார்க்க முடியாதது. எழுத்தறிவற்றவர்க்கு அறிவு ஒளியூட்ட முயல்கிற இன்றைய ஆசிரியர்க்கு அவர் ஓர் அற்புத வழிகாட்டி. குறையேதுமற்றவர்க்குக் கற்பிப்பது எளிது. ஆனால் ஹெலன் கேட்க, பார்க்கப் பேச இயலாதவர். அவருக்குக் கற்பிக்க எவ்வளவு பொறுமை, சகிப்புத் தன்மை, தன்னம்பிக்கை, விடா முயற்சி வேண்டும்? ஸல்லிவனுக்கு அவை இருந்தன.
வார்த்தை வார்த்தையாக ஹெலனின் கையில் எழுதிக் காட்டித்தான் தன் கற்பித்தலைத் தொடங்கினார்.
ஒரு பொம்மையை ஹெலனிடம் கொடுத்து விளையாடச் சொன்னார். பிறகு அதை வலது கையில் வைத்து, இடது கையில், தன் விரல்களால் (D-O-L-L) என்று எழுதிக் காட்டினார். இதையும் ஒரு விளையாட்டு என்றே ஹெலன் உற்சாகம் கொண்டார். அவருக்கு இந்த விளையாட்டு மிகவும் பிடித்துப் போயிற்று. உடனே ஆசிரியையின் கையில் அதேபோல கொஞ்சங்கூடப் பிசிறில்லாமல் முதல் தடவையிலேயே எழுதிக் காட்டினார்.
தினமும் இந்த விளையாட்டு தொடர்ந்தது. புரிந்து கொள்ள முடியாதவற்றை, சூழ்நிலையைப் பயன்படுத்திக் கற்பித்தார். வீட்டுக்கு வெளியே அழைத்துப் போய் செடி, பூ, மரம், காய், பழம், மண், நீரூற்று என்று அறிமுகப்படுத்தினார். இப்படி வார்த்தை வார்த்தையாய் எழுதிக் கற்பிப்பது எவ்வளவு ஆயாசம் தரும் விஷயம்! கேட்கிற நமக்குத்தான் அலுப்பும் சலிப்புமாய்த் தோன்றுமே தவிர, உயிரைக் கொடுத்து போதித்த ஆசிரியைக்கோ, ஊக்கம் குன்றாது கற்றுக்கொண்ட மாணவிக்கோ ஒரு சிறிதும் ஆயாசமில்லை.
எட்டு வயதில் பாஸ்டனில் உள்ள பார்வையற்றோர் பள்ளியில் சேர்ந்து அசாதாரண வளர்ச்சியும் அறிவும் பெற்றார் ஹெலன். பத்து வயதில் பேச வேண்டும் என்ற தீவிர ஆசை ஏற்பட்டது. அதற்கும் பயிற்சி தர ஒரு அற்புதமான ஆசிரியர் அவருக்குக் கிடைத்தார்.
மிஸ் ஸாராபுல்லர் என்ற ஆசிரியர் அந்த அற்புதத்தை நிகழ்த்தினார். 'லிப்ஸ் ரீடிங்' என்கிற உதடுகளை ஸ்பரிசித்து உணர்கிற கலையை அவர் ஹெலனுக்குக் கற்பித்தார். விரல்களால், பேசுபவரது உதடுகளைத் தொட்டறிந்து, அவ்வாறே ஒலிகளைப் பேசிப் பழகினார் ஹெலன். நூறுமுறை, ஆயிரம் முறை வாய்வலிக்கப் பேசினார். ஓரளவு பேசவும் அவரால் முடிந்தது. முதலில், அவள் பேசியது பிறர்க்குப் புரியாது போனாலும், அவரது ஆசிரியர்களான ஸல்லிவன், ஸாரா புல்லர் ஆகியோரால் புரிந்து கொள்ள முடிந்தது. முழுமையான பயிற்சிக்குப்பின் கரகரத்த குரலில் ஓரளவு, கேட்பவர் புரிந்து கொள்கிற மாதிரி ஹெலனால் பேச முடிந்தது. இந்தக் கடுமையான பயிற்சியாலேதான், அவர் உலகெங்கும் சுற்றி, சொற்பொழிவாற்றியும், ஊனமுற்றவர்க்கு ஆதரவு தேடியும் சாதனை செய்ய முடிந்தது. கேட்பது மட்டுமே கிட்டாததாய் இருந்தது. அதனால் பிறர் பேசும்போது உதட்டில் விரல் வைத்து ஒலியை உணர்ந்து புரிந்து கொள்ளப் பயின்று வெற்றியும் பெற்றார்.
இதல்லாம் அபூர்வ மோப்ப சக்தியும், பிறர் நடக்கும்போது எழும் அதிர்வினால் ஆளை இனம் காணும் திறனும் வாய்த்ததால், சக மனிதர்களை ஹெலனால் அறிய முடிந்தது. பிறரது கையைக் குலுக்கும்போதே அவரது குணநலன்களைப் படித்து விடுகிற கூரிய திறனும் உண்டாயிற்று.
'இன்பத்தின் ஒரு கதவு மூடும்போது, மற்றொரு கதவு திறக்கிறது. ஆனால் மூடிய கதவையே உற்று நோக்குவதால் நமக்காகத் திறந்திருக்கும் கதவை நாம் பார்ப்பதில்லை' என்று சொன்ன ஹெலன், தனக்காகத் திறக்கப்பட்ட கதவுகளை வெகு எளிதில் அறிந்து கொண்டு, தன் இழப்புகளை அலட்சியப்படுத்தி வாழ்வின் இன்பங்களை உய்த்துணரக் கற்றார். இதன்மூலம் அரிய சாதனைகளை அவரால் எட்ட முடிந்தது.
பிரெய்ல் எழுத்து மூலம் பிரஞ்சும், லத்தீனும் கற்றார். கல்லூரித் தேர்வுகளிலும் பிரெய்ல் மூலமே தடவித்தடவி வினாக்களை அறிந்துகொண்டு விடைகளை, ஸல்லிவனின் கையில் எழுதிக் காட்டி விடைத்தாளில் எழுதச் செய்து வெற்றி பெற்றார். பிரெய்ல் எழுத்தில் வந்த எல்லாப் புத்தகங்களையும் தேடி, வாங்கிப் படித்தார். புத்தகங்கள் தந்த இன்பம் ஹெலனுக்கு மகத்தானதாக இருந்தது.
மனித ஆற்றலின் மீது அவருக்கு திடமான நம்பிக்கை இருந்தது. அதை வலியுறுத்தியும் அதனால் பெறக்கூடிய சாத்தியக்கூறுகளைப் பற்றியும் நூல்கள் எழுதி, கண்ணற்ற பலருக்கு அவர் கண்ணாகப் பயன்பட்டார்.
'நாம் நம்பிக்கை கொள்வோம்' என்றொரு நூல். அதில், வாழ்க்கையில் அவசரமாக ஒவ்வொருவரும் சாதிக்க வேண்டியதன் அவசியத்தை விளக்கி எழுதினார். 'வாழ்க்கையை ஒரு அவசர நெருக்கடியாக, ஒவ்வொருவரும் உணரவேண்டும். அப்போதுதான் நமது ஆற்றல் எல்லாம் வலிமை பெற்று செயல்களைத் துரிதமாகச் செய்ய முடியும்' என்பது அவர் தன் எழுத்தின்மூலம் பரப்பிய கொள்கை ஆகும்.
உலகத்தின் கவனத்தை எல்லாம் கவர்ந்து புகழின் உச்சநிலையை ஹெலன் அடைந்தபோது உலகப் பயணம் மேற்கொண்டார். அப்பயணத்தின்போது உலகின் மிகச் சிறந்த மேதைகள் பலரை நேருக்கு நேர் சந்தித்து உரையாடி மகிழ்ந்தார். 1955-ல் இந்தியா வந்தபோது நேருஜியைச் சந்தித்துக் கைகுலுக்கி, அவரது உயரிய பண்புகளை உணர்ந்தறிந்தார். தான் சந்தித்த தலைவர்களில் நேருவே தன்னை மிகவும் கவர்ந்ததாகச் சொன்னார்.
உலகெங்கும் பார்வையற்றோர் செவிப்புலனற்றோர் பள்ளிகள் திறக்கவும் அவர்களுக்கு உதவவும் தன் பயணங்களில் பிரசாரம் செய்தார். ஒன்றரை கோடி ரூபாய் நிதியுடன் 'ஹெலன் கெல்லர் நிதி' என்று தொடங்கி, அதிலிருந்து கிடைத்த தொகைகளை மேற்படி பள்ளிகளுக்கு வாரி வழங்கினார். அதற்கு நிதிதிரட்ட நாடகங்கள் நடத்தியும், 'மீட்சி' என்று தன் வாழ்க்கையைப் படமாக எடுத்து அதில் தன் பாத்திரத்தில் தானே நடித்தும் தொண்டு செய்தார். பார்வையற்றவர்க்கென்று தேசிய நூலகம் ஒன்றையும் உருவாக்கி, உலக முழுதும் அதற்கு நூல்கள் வந்து குவிய ஏற்பாடு செய்தார். இப்படித் தன் இறுதிநாள் வரை பொறியிழந்தவர்க்குத் தைரியமூட்டி, அவர்களும் தன்னைப் போல மீட்சி பெற உழைத்தார்.
1968-ல் தனது எண்பத்து எட்டாவது வயதில், இடைவிடாது விதியோடு போரிட்ட இயக்கம் ஓய்ந்துபோனது.
மார்க் ட்வைன் என்ற மிகச் சிறந்த எழுத்தாளர், 'இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த இருவரைத் தேர்வு செய்தால் ஒன்று நெப்போலியன், மற்றொருவர் ஹெலன் கெல்லர் ஆக இருக்கும்' என்று பாராட்டினார்.
''வாழ்க்கையில் இழப்பு என்பதே இல்லை; ஒன்று போனால் இன்னொன்று வரும்! அந்த நம்பிக்கை இருந்தால் வாழ்க்கை வெறுமை ஆகாது'' என்று சொன்ன ஹெலன், தானே அப்படி வாழ்ந்து காட்டியவர். நம்பிக்கை வறட்சி நிறைந்து போயிருக்கிற இன்றைய வாழ்க்கையில், தன்னம்பிக்கையையும் துணிவையும் உண்டாக்கி, நிறைவோடும் மகிழ்ச்சியோடும் வாழ, ஹெலன் கெல்லரின் வாழ்க்கை அனைவர்க்கும் வழிகாட்டுவதாக உள்ளது.