Thursday, 5 August 2010

மாவீரர் மகா அலெக்ஸாண்டர்

2350 ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பாவின் மாசிடோனியா மாநிலத்தில் பிறந்தவர் மாவீரர் மகா அலெக்ஸாண்டர். இவர் வாழ்ந்த காலம் [கி.மு:356-323] ஆகும். முதலாகத் தொடங்குகிறது. கிரேக்க வீரர் மகா அலெக்ஸாண்டர் தனது மத்திம வாழ்வின் துவக்கத்தில் 32 ஆம் வயதில் நோய்வாய்ப்பட்டுக் காலமானார்.

பதினெட்டு வயது முதல் அவரது அபாரப் போர்த்திறமை வெளிப்பட்டு, அந்தக் குறுகிய காலத்திலே சீரான கிரேக்கப் படையைத் தயாரித்து வட ஆ·பிரிக்கா, மத்தியாசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் வட இந்தியா வரை சென்று வெற்றிக்கொடி நாட்டிக் கடல் வழியாக முதன் முதலில் மீண்டு மத்தியாசியாவை அடைந்தவர்.

பெரும் படை வீரரை மட்டும் கொண்டு செல்லாது, அலெக்ஸாண்டர் தன்னுடன் விஞ்ஞானிகள், தளவரையாளிகள் [Surveyors] ஆகியோரையும் அழைத்துச் சென்று, பூகோள வரைப்படம், காலநிலை, நாட்டின் வரலாறு, கலை, கலாச்சாரம் போன்றவை பதிவு செய்தார். அதே சமயம் ஐரோப்பிய கிரேக்க நாகரீகம், கலைகள், கலாச்சாரம் பற்றி அந்த நாடுகளும் அவரது படையெடுப்புக்குப் பிறகு முதன்முதல் அறிந்து கொண்டன.

அலெக்ஸாண்டரின் போதகக் குரு அரிஸ்டாடில் [கி.மு.384-322]. கிரேக்க வேதாந்தி பிளாட்டோவின் [கி.மு.427-347] சீடர் அரிஸ்டாடில். கி.மு. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க இதிகாசக் கவி ஹோமர் அலெக்ஸாண்டரின் அகப்பேரொளி [Inspiration]. தந்தையாரின் வாரிசாய்ப் பெற்ற, தளர்ந்து போன கிரேக்க நாட்டைப் பன்மடங்கு பெரிதாக்கி, அன்னிய நாடுகளில் கிரேக்கரின் கலாச்சாரத்தை முதன்முதல் விதைத்தார்.

அவர் கைப்பற்றி விரிவாக்கிய நாட்டுப் பரப்பு எகிப்த் முதல் வட இந்தியா வரை பரவியது. வென்ற தளத்தில் எல்லாம் அலெக்ஸாண்டர் தன்பேரில் புதுப்புதுப் பெயர்களை வைத்தார். ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலாக அவர் எகிப்தில் அடிக்கல் நாட்டிய அலெக்ஸாண்டிரியா நகரம், காலவெள்ளம் அடித்துச் செல்லாது அவரது தீர வரலாற்றை இன்னும் முரசடித்துக் கொண்டிருக்கிறது!

ஆசிய அதிபதி மகா அலெக்ஸாண்டர்

கி.மு.338 ஆம் ஆண்டில் கிரேக்கருடன் போரிட வைத்து அலெக்ஸாண்டரின் தந்தை இரண்டாம் ·பிளிப் [Philip II] தனித்தனியாக ஆண்டுவந்த மாஸிடோனியன் குடிவாசிகளின் பகுதிகளையும், மற்ற நகரங்களையும் சேர்த்து ஓர் ஐக்கிய மாசிடோனியாவாக ஆக்கினார். ஆனால் அப்போது 20 வயதான அலெக்ஸாண்டருக்குத் தந்தை செய்த அவ்விணைப்புப் போதுமானதாகத் தெரிய வில்லை! கி.மு.336 ஆம் ஆண்டு அலெக்ஸாண்டர் அரசராக முடிசூடினார். மாபெரும் கிரேக்க இதிகாச வீரர்களான ஹெர்குலிஸ், அக்கிலிஸ் [Hercules, Achilles] பரம்பரையில் வந்ததாக அலெக்ஸாண்டர் தன்னைப் பீற்றிக்கொண்டார்! அவர்களைப் போன்று தானும் தன் தனது பராக்கிரமத்தை உலகில் காட்ட வேண்டும் என்று தீர்மானித்தார்.

கி.மு.334 ஆம் ஆண்டில் அலெக்ஸாண்டர் திறமையுடன் 30,000 கிரேக்கப் படையினரை அணிவகுத்து, உணவு, உடை, வாகனம், வசதி அளித்து ஹெல்லெஸ்பாண்ட் [Hellespont (Gallipoli)] தளமுனையைக் கடந்து பெர்ஸியா [Persia] நாட்டின் உள்ளே நுழைந்தார். தனது போர்த் தந்திரத்தாலும், கனிவுக் கவர்ச்சியாலும் கிராகஸ் நதியைக் கடந்து போரிட்டு, லெபானின் டையரையும் [Granicus (Goneri) River to Tyre (Beirut Lebanon)] அடுத்துக் கைக்கொண்டு, எகிப்தைப் பிடித்தார். அதாவது முதல் மூச்சிலேயே தனது பராக்கிரமத்தில் கிழக்கு மத்தியதரைப் பகுதிகளைக் கைப்பற்றித் தன் வெற்றிகளை நிலைநாட்டினார். கி.மு.331 இல் பெர்ஸிய மன்னன் மூன்றாம் டாரியஸ் [Darius III] மூர்க்கப் படைகளை கௌகமேலா [Gaugamela (Tabriz, Iran)] என்னுமிடத்தில் முறியடித்து, பெர்ஸிபோலிஸ் அரண்மனைக்குத் [Persepolis] தீவைத்தார்.

150 ஆண்டுகளுக்கு முன்பு பெர்ஸியா மன்னன் கிரேக்கரின் அக்ரபோலிஸ் [Acropolis] நகரைத் தீவைத்து அழித்த கோரத்திற்குப் பழிவாங்கிக் கொண்டார்.

"ஆசிய அதிபதி" [Lord of Asia] என்று தன்னைப் பீற்றிக் கொண்டு, அலெக்ஸாண்டர் காடு, மலை, பாலைவனம் கடந்து, கடும் மழை, வெப்பம் தாங்கிக் கொண்டு ஆ·ப்கானிஸ்தானில் உள்ள ஹிந்துகுஷ் மலைத் தொடர்களைத் தாண்டி, எதைப் பற்றியும் அறியாத பிரதேசங்களில் துணிவாகப் படைகளுடன் கால்வைத்தார். ஐந்து நதிகள் பாயும் சிந்து சமவெளிப் பரப்பில் அலெக்ஸாண்டர் நுழைந்து இந்திய மன்னன் புருஷோத்தமனைத் தோற்கடித்து வெற்றி பெற்றார். வென்ற நாடுகளில் எல்லாம் தன் பெயரில் 32 புதிய நகரங்களுக்கு அலெக்ஸாண்டிரியா எனப் பெயரிட்டார். இறுதியாக ஹைபஸிஸ் நதிக் கரையில் [Hyphasis (Sutlej River)] கிரேக்கப் படையினர் களைத்துப் போய் அடுத்துப் போரிட மறுத்தனர். பிறகு சிந்து நதித் தீரத்தில் தென்புறம் நடந்து படாலா [Patala] வழியாக அரபிக்கடலை அடைந்து படகுகளில் பெர்ஸின் வளைகுடா கடந்து பாபிலோனை [Babylon] வந்து சேர்ந்தார் என்று அறியப் படுகிறது. கி.மு.323 ஆம் ஆண்டு பாபிலோனில் அலெக்ஸாண்டர் தனது 32 ஆம் வயதில் நோய்வாய்ப் பட்டுக் காலமானார்.